'மாவு'னா இப்படி.. 'பவுடர்'னா அப்படி.. இட்லி தோசைக்கு வந்த ஜிஎஸ்டி குழப்பம்.!
உணவுப்பொருட்கள் ஒன்று என்றாலும் மாவுக்கும், பவுடருக்கும் தனித்தனி ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
காலை உணவோ, இரவு உணவோ வீட்டில் தவறாமல் இடம் பிடிப்பது இட்லி, தோசை தான். வீடுகள் மட்டுமின்றி உணவங்களிலும் இட்லி, தோசைக்குத் தான் மவுசு. குறிப்பாக இட்லி என்பது அனைத்து வயதினற்குமான உணவாகவுள்ளது. குழந்தை முதல் முதியவர்கள் வரை இடலியை ருசி பார்ப்பார்கள். எளிதாக செரிக்கும் தன்மை, எளிதாக மெல்லும் வகை, எண்ணெய் அல்லாது வேக வைத்தல் மூலம் தயார் செய்யப்படுவது என பலதரப்பட்ட நன்மைகள் இட்லியில் உண்டு. இப்போதெல்லாம் இட்லி தோசைக்கான மாவு என்பதுமே விற்பனையில் உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் பாக்கெட்டுகளிலும், பவுடர் வடிவிலும் கூட இட்லி தோசைக்கான மாவுகள் கிடைக்கப்பெறுகின்றன. வீட்டில் மாவு அரைக்க வாய்ப்பில்லாத, அவசரத் தேவைக்கான பலரும் தயார் நிலையில் இருக்கும் மாவு, அல்லது பவுடரை நாடுகின்றனர். உணவுப்பொருட்கள் ஒன்று என்றாலும் மாவுக்கும், பவுடருக்கும் தனித்தனி ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அதாவது சமைப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் கஞ்சி, தோசை மற்றும் இட்லி உணவுகளுக்கான பவுடர் வடிவு பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இட்லி மற்றும் தோசை மாவை பவுடராக இல்லாமல் மாவாகவே விற்பனை செய்தால் ஜிஎஸ்டி 5% மட்டுமே. ஒரே உணவுப்பொருட்களுக்கான மூலப்பொருள்தான், ஆனால் பவுடர் மற்றும் மாவுக்கு இருவேறான ஜிஎஸ்டி ஏன் என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கிருஷ்ணா பவன் புட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் என்ற நிறுவனம் தமிழகத்துக்கான ஜிஎஸ்டி தீர்ப்பாயத்தில் முறையீடும் செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம், இட்லி, தோசை உணவுக்கான மூலப்பொருள் பவுடராக விற்பனை செய்யும்பட்சத்தில் அதன் ஜிஎஸ்டி என்பது 18% தான். அது குறைக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் குறிப்பிட்ட ஜிஎஸ்டி தீர்ப்பாயம்,
தோசை மற்றும் இட்லி மூலப்பொருட்கள் மாவாக இல்லாமல் பவுடராக விற்பனை செய்யப்படுகின்றன. அதில் தண்ணீரோ, சுடு தண்ணீரோ அல்லது தயிரோ சேர்க்கப்பட்டு தான் மாவாக மாற்றப்படும். எனவே அவை மாவாகவே விற்பனை செய்யப்படவில்லை. மாவாக மாற்றப்படவே செய்கிறது. இது மாதிரியாக மாவாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கு CGST 9% மற்றும் SGST 9%. ஆக 18% ஜிஎஸ்டி என்பதில் மாற்றமல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விளக்கத்தால் உணவுப்பொருட்கள் நிறுவனங்கள் குழப்பமும், ஏமாற்றமும் அடைந்துள்ளன. ஒரே உணவுப்பொருள் என்றாலும் இது போன்ற வித்தியாசங்களை குறிப்பிட்டு ஜிஎஸ்டியில் வேறுபாட்டை காட்டுவது பல்வேறு குழப்பங்களுக்குத்தான் வழிவகுக்கும் என புலம்புகின்றனர்.
முன்னதாக, கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில் இதேபோன்ற வசதிக்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி இந்த தொகை வழங்கப்பட்டது. அப்போது இதே ஏற்பாட்டின் படி மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.