Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Manual Vs Automatic Car Maintenance: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் ஆட்டோமேடிக் அல்லது மேனுவல் கார்களில் , எதன் பராமரிப்பு மலிவானது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Manual Vs Automatic Car Maintenance: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் ஆட்டோமேடிக் அல்லது மேனுவல் கார்களில், எதன் பராமரிப்பு மலிவானது? ஏன்? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மேனுவல் Vs ஆட்டோமேடிக் கார்:
போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் கிளட்ச்சை மிதித்து கியரை மாற்றி, காரை செலுத்துவது என்பது பலருக்கு கடினமான செயலாக இருக்கலாம். அதன் காரணமாகவே பைக்குகளின் மினி எடிஷனாக ஸ்கூட்டர்கள் வெளியானதை போலவே, மேனுவல் கார்களுக்கு மாற்றாக ஆட்டோமேடிக் கார்கள் சந்தைப்படுத்தப்பட்டன. இதில் கிளட்ச் இருக்காது என்பதோடு, கியரையும் ஓட்டுனர் மாற்ற வேண்டிய அவசியமில்லை. வாகனத்தின் வேகம் மற்றும் லோட் அடிப்படையில், ஆட்டோமேடிக் வாகனங்களில் கியர் தாமாகவே மாறும். ஓட்டுனர் பார்க், ரிவர்ஸ், நியூட்ரல் மற்றும் ட்ரைவ் ஆகிய நிலைகளை மட்டும் தேர்வு செய்தால் மட்டும் போதுமானது. இது காரை இயக்குவதை மிகவும் எளிதாக மாற்றுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு வகையிலான கார்களும், சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் எதன் பராமரிப்பு மிகவும் எளிது என்பதே தற்போதைய கேள்வியாகும்.
மேனுவல் Vs ஆட்டோமேடிக் கார்: பராமரிப்பு செலவு
பொதுவாக, ஆட்டோமேடிக் கார்களை காட்டிலும் மேனுவல் கார்களின் பராமரிப்பு செலவு குறைவு என்பதே பயனாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இதற்கான பிரதான காரணமாக, மேனுவல் கியர்பாக்ஸ் எளிமையான டிசைன் மற்றும் குறைவான உதிரிபாகங்களை கொண்டிருப்பதே கூறப்படுகிறது. இதனால் பழுது பார்ப்பது எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கிறது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்கள் மிகவும் சிக்கலான அமைப்பை கொண்டிருப்பதால், அதிகப்படியான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் செலவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் விவரங்கள்:
- குறைந்த முதலீடு: ஆட்டோமொபைல் சந்தையில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்ட கார்களானது, ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கார்களை காட்டிலும் மலிவு விலையில் கிடைக்கின்றன.
- எளிமையான வடிவமைப்பு: மேனுவல் கியர்பாக்ஸ்கள் குறைவான உதிரிபாகங்கள் மற்றும் அதிக சிக்கலற்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால் பழுது ஏற்பட்டாலும் அதனை சரி செய்யும் செலவு குறைவே.
- பழுதுபார்ப்பது மலிவு: கைதேர்ந்த சிறப்பு அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளால் மட்டுமே ஆட்டோமேடிக் எடிஷன் வாகன பழுதுகளை நீக்க முடியும். ஆனால், பல நேரங்களில் சாதாரண கார் மெக்கானிக்குகள் கூட மேனுவல் வாகனங்களில் ஏற்படும் பிரச்னையை சரி செய்ய முடியும்.
- கிளட்ச் மாற்றம்: மேனுவல் கார்களில் பிரதான பராமரிப்பாக கிளட்ச்சை மாற்றுவது இருக்கிறது. இது அதிகப்படியான செலவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், ஆட்டோமேடிக் வாகனங்களில் ஏற்படும் பெரும் பழுதை நீக்குவதற்கான செலவுடன் ஒப்பிடுகையில், கிளட்ச் மாற்றத்திற்கான செலவு குறைவே ஆகும்.
- எரிபொருள் செலவு: பொதுவாக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்கள் அதிக எரிபொருள் செயல்திறன் கொண்டிருக்கின்றன. இது, ஓட்டுனர் வாகனத்தை எப்படி கையாள்கிறார் என்பதையும் சார்ந்ததாகும்.
EV vs Petrol Car: தினமும் ஓட்டனும்.. மின்சார காரா? பெட்ரோல் காரா? எது பெஸ்ட்? காரணம் என்ன? செலவு எதில் கம்மி?
ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் விவரங்கள்:
- அதிக முதலீடு: ஆட்டோமேடிக் கார் மாடல்களின் விலை மேனுவல் கார்களை காட்டிலும் பொதுவாகவே அதிகமாக உள்ளது.
- சிக்கலான வடிவமைப்பு: ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வாகனங்கள் மிகவும் சிக்கலான வடிவமைப்பை கொண்டிருப்பதோடு, டார்க் கன்வெர்டர்ஸ் மற்றும் கடினமான கியர் சிஸ்டம்கள் போன்ற பாகங்களை பெற்றுள்ளன. இவற்றில் ஏற்படும் பழுதை சரி செய்வது மிகவும் சிரமமானதாக இருக்கும்.
- அதிகப்படியான பழுதுபார்ப்பு செலவு: ஏதேனும் கோளாறு ஏற்பட்டு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் காரில் பழுது ஏற்பட்டால், சிக்கலான அமைப்பை சீர்படுத்த அதிக செலவாகும்.
- ஆயில் மாற்றம்: ஆட்டோமேடிக் வாகனங்களில் சீரான இடைவெளியில் ஆயிலை மாற்ற வேண்டியதாக இருக்கும். இதுவும் மேனுவல் வாகனங்களின் ஆயிலை காட்டிலும் கூடுதல் விலையை கொண்டிருக்கும்.
- எரிபொருள் செலவு: மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்கள் உடன் ஒப்பிடுகையில், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வாகனங்கள் குறைந்த மைலேஜையே வழங்குகின்றன
பராமரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதர காரணங்கள்:
வாகனத்தை ஓட்டும் வழக்கம்: வாகனத்தை நாம் எப்படி கையாள்கிறோம் மற்றும் பொதுவாக எப்படி செலுத்துகிறோம் என்பதை சார்ந்தே, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆகிய இரண்டு வாகனங்களிலும் தேய்மானம் மற்றும் உராய்வு ஏற்படுகிறது.
பராமரிப்பு அட்டவணை: பெரும் பழுதுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை தவிர்ப்பதற்கு, விற்பனையின்போது வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சீரான கால இடைவெளியில் பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெரும் செலவினை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
குறிப்பிட்ட வாகன மாடல்: காரின் உருவாக்கம் மற்றும் அதன் மாடலும் கூட, அதன் பராமரிப்பு செலவில் முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக சில வாகனங்கள் விலையுயர்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த உபகரணங்களை கொண்டிருப்பதாகும்.





















