ஒருவழியாக இந்தியாவுக்கு வரும் டெஸ்லா.. தலைசுற்ற வைக்கும் விலை.! அமைச்சர் வெளியிட்ட தகவல்கள்!
இந்தியாவில் வாகனத்தின் விலைக்கு முக்கிய பங்கு இருக்கும் சூழலில், இந்தியாவுக்குள் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்த இந்திய அரசு, டெஸ்லா நிறுவனம் ஒரே சிந்தனையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் `டெஸ்லா’ கார் அறிமுகப்படுத்தப்படும் போது, மலிவு விலையில் சுமார் 35 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலகின் ஐந்தாவது பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட் எனக் கருதப்படும் இந்தியாவில் வாகனத்தின் விலைக்கு முக்கிய பங்கு இருக்கும் சூழலில், இந்தியாவுக்குள் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்த இந்திய அரசு, டெஸ்லா நிறுவனம் ஒரே சிந்தனையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய டெஸ்லா நிறுவனம் அழைக்கப்பட்டதாகவும், அரசோடு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா டுடே கான்க்ளேவ் 2021 என்ற நிகழ்ச்சியில் சூழலியல் மாற்ற குறித்த அமர்வில் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா காரை அறிமுகப்படுத்துவது குறித்து டெஸ்லா நிறுவனம் சார்பில் எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும் இந்தியாவில் மக்களால் வாங்க முடிந்த அளவில் டெஸ்லா மாடல் 3 வகை கார், சுமார் 55 முதல் 60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பேசியுள்ள நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவன அதிகாரிகளிடம் `மேட் இன் சீனா’ கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேணாம் எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். `டெஸ்லா நிறுவன அதிகாரிகளிடம் சீனாவில் கார் உற்பத்தி செய்து இந்தியாவில் விற்க வேண்டாம் எனக் கூறியுள்ளேன். இது எனது மனதில் இருந்ததால், அவர்களிடமே நேரடியாகக் கூறினேன். இந்தியா வாருங்கள். கார் உற்பத்தி செய்யுங்கள். இங்கே விற்பனை செய்யலாம். இங்கிருந்து ஏற்றுமதி செய்யலாம். உங்களுக்குத் தேவையான உதவியை அரசு செய்து தரும்’ எனக் கூறியதாக நிதின் கட்கரி பேசியுள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையைக் கவனித்து, இந்தியாவுக்கு ஏற்ற விலையில் கார்களை விற்பனை செய்ய ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. 50 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும் சீனா மீதான அதிருப்தியை வெளிப்படையாக அரசு பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளது இதுவே முதல்முறை.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியைக் குறைக்குமாறு டெஸ்லா நிறுவனம் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெஸ்லா அறிமுகப்படுத்த விரும்பும் கார் மாடல்களுக்கு இந்தியாவில் 100 சதவிகித வரிவிதிப்பு அமலில் இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 60 சதவிகிதம் வரை வரிவிலக்கு கேட்பதாகக் கூறப்படுகிறது.
சாலைப் போக்குவரத்து அமைச்சகர், தொழில் வளர்ச்சித் துறை, நிதி ஆயோக் முதலான அரசு நிறூவனங்கள் டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கையை ஆதரித்துள்ளன. எனினும் அரசுத் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.