Electric Vehicles: இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - மத்திய அரசு விளக்கம்...
இந்திய நாட்டில் மார்ச் 2024-க்குள் மேலும் 7,432 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது,
"இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டுக்கு விரைந்து மாறுதல் என்னும் ஃபேம் (FAME) இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மத்திய அரசு தீவிரமாக, செயல்படுத்தி வருகிறது.
போக்குவரத்தில் மின்சார தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மானியம்:
மின்சாரப் பேருந்துகள், மூன்று சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
ஃபேம் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள் கார்கள், 10 லட்சம் இரு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு உதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 25,938 கோடி மதிப்பீட்டில் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை 11 ஜூன் 2021 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இதே போல் மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என மக்களவையில் மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
மின்னேற்ற நிலையங்கள்:
மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7432 பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் 3,438 சார்ஜிங் நிலையங்களும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் 2,334 சார்ஜிங் நிலையங்களும், இந்தூஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் 1,660 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே நாடு முழுவதும் 6,586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. கூடுதலாக அமைக்கப்பட உள்ள இந்த 7,432 நிலையங்கள் நாட்டில் மின்சார வாகன பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகளை அதிகரிக்கும். இவை மார்ச் 2024-க்குள் அமைக்கப்படும். இந்த விரைவான மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், அனைத்து மெட்ரோ நகரங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள், மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்கள் ஆகியவற்றில் அமைக்கப்படும். இந்த நடவடிக்கை பசுமை போக்குவரத்தை மேம்படுத்தும்" என்று மகேந்திரநாத் பாண்டே தெரிவித்தார்.