Skyworth EV6 II: ஒருமுறை சார்ஜ் செய்தால் 620 கி.மீ. பயணம்.. அதிரடியாக களமிறங்கிய ஸ்கைவொர்த் EV6 II மின்சார கார்
ஒருமுறை சார்ஜ் செய்தால் 620 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய ஸ்கைவொர்த் EV6 II மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 620 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய ஸ்கைவொர்த் EV6 II மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள்:
சர்வதேச சந்தையில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பல புதிய மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தான் சீனாவை சேர்ந்த ஸ்கைவொர்த் நிறுவனமும், புதிய மாடல் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களை பயனாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஸ்கைவொர்த் EV6 II கார்:
ஸ்கைவொர்த் நிறுவனத்தின் புதிய மாடல் கார் EV6 II என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் தொடக்க விலை, இந்திய மதிப்பில் 17 லட்சத்து 80 ஆயிரத்து 392 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர், பிளஸ், மேக்ஸ் மற்றும் பெரிசிடன்ட் என நான்கு வித எடிஷன்களில் ஸ்கைவொர்த் EV6 II மாடல் கிடைக்கிறது. ஒவ்வொரு எடிஷனுக்கும் விலை மாறுபடுகிறது.
பேட்டரி விவரங்கள்:
புதிய ஸ்கைவொர்த் EV6 II மாடலில் 150 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் AIR மாடலில் 71.98 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மற்ற மாடல்களில் 85.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும் என ஸ்கைவொர்த் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் சிறப்பம்சங்கள்:
புதிய EVயின் வெளிப்புற வடிவமைப்பு முந்தைய மாடலைப் போன்ற அம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேநேரம், எலெக்ட்ரிக் எஸ்யுவி-இன் உள்புறம் டச் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன், 12.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் மல்டிமீடியா, நேவிகேஷன் மற்றும் மொபைல் கம்யுனிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் சன்ரூஃப், ஏசி, ரியல் டைம் ஜிபிஎஸ், சியோமியின் விர்ச்சுவல் இன்டெலிஜன்ட் ரோபோட் வழங்ப்பட்டுள்ளது. அளவீடுகளை பொருத்தவரை புதிய EV6 II மாடல் 4720mm நீளம், 1908mm அகலம், 1696mm உயரம், 2800mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் வீல்கள், சிங்கில் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஸ்கைவொர்த் EV6 II ஆனது ஸ்யூட்+லெதர் இருக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த மின்சார வாகனத்தின் பிரதான இருக்கை அமைப்பை ஆறு திசைகளிலும், துணை இருக்கையை நான்கு திசைகளிலும் அட்ஜஸ்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த கார் எப்போது சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.