Skoda Superb: எப்புட்றா.. லிட்டருக்கு 42.89 KM, மொத்தமா 2,831 கிமீ மைலேஜ் - ஸ்கோடாவின் சூப்பர்ப் மாடல், விலை?
Skoda Superb Car: ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் கார் மாடல் 2 ஆயிரத்து 831 கிலோ மீட்டர் மைலேஜ் அளித்து, கார் பிரியர்களை பிரம்மிப்படைய செய்துள்ளது.

Skoda Superb Car: ஸ்கோடா நிறுவனத்தின் புதிய தலைமுறை சூப்பர்ப் கார் மாடல், நடப்பாண்டு இறுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தகக்து.
ஸ்கோடா சூப்பர்ப் கார் மாடல்:
சுற்றுச்சூழல் மாசுபாடு எனும் விவாதத்தில் டீசல் இன்ஜின் கார்கள் மிகவும் சர்ச்சைக்குரிய பாகங்களாக இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்த இன்ஜின் கார்களின் அபாரமான செயல்திறனை யாராலும் நிராகரிக்க முடியாது. பெட்ரோல் இன்ஜின் (ஹைப்ரிட் அல்லாத) கார்களை கொண்டு கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத மைலேஜை டீசல் இன்ஜின் கார்களால் அநாயசமாக வழங்க முடியும். இது நீண்ட தூர பயணங்களுக்கானதகாவும், சிக்கனமானதகாவும் உரிமையாளர்களை திளைக்கச் செய்கிறது. இதனை நிரூபிக்கும் விதமாக தான், போலந்தைச் சேர்ந்த கார் பந்தய ஓட்டுனரான மைகோமார்க்சிக், தனது ஸ்கோடாவின் சூப்பர்ப் கார் மாடலை கொண்டு கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
2,831 கி.மீ., மைலேஜ் - கின்னஸ் சாதனை
ஒரு முறை எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினாலே 2 ஆயிரத்து 831 கிலோ மீட்டர் பயணிக்க முடியுமா? அதனை தனது சூப்பர்ப் காரின் டீசல் எடிஷன் மூலம் மைகோ நிகழ்த்தி காட்டியுள்ளார். இதன் மூலம் ஒரு முறை எரிபொருள் டேங்கை நிரப்பி, மிக நீண்ட தூரம் பயணம் செய்வதவர்” என்ற கின்னஸ் சாதனையை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த அபரிவிதமான சாதனையை அடைய காரில் பல மாற்றங்கள் (கஸ்டமைஸ்ட்) செய்யப்பட்டு இருக்கும் என பலரும் கருதலாம். ஆனால், அப்படி எதுவுமே செய்யப்படவில்லை. ஏற்கனவே, சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்த தனது சொந்த சூப்பர்ப் கார் மாடலை தான், இந்த சோதனையில் அவர் பயன்படுத்தியுள்ளார். காருக்கான எரிபொருள் டேங்கின் கொள்ளளவான 66 லிட்டரில் கூட எந்தவித மாற்றமும் செய்யவில்லையாம். 16-இன்ச் அலாய்ஸில் லோ-ரெசிஸ்டண்ட் டயர்கள் மற்றும் ஸ்போர்ட்லைன் வேரியண்டிலிருந்து சஸ்பென்ஷன் ஸ்பிரிங்ஸ் ஆகியவை மட்டுமே மாற்றப்பட்டன. இதனால் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸில் 15 மிமீ குறைக்கப்பட்டது.
5 நாடுகளுக்கு இடையே பயணம்:
ஸ்கோடாவின் சூப்பர்ப் காரின் சாதனை பயணமானது போலந்தில் இருந்து தொடங்கி ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு சென்று, அங்கிருந்து நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் வழியாக மீண்டும் ஜெர்மனியை அடைந்து முடிவடைந்தது. இந்த சாலைகளில் வெப்பநிலையானது பெரும்பாலும் குளிரானதாகவும், சில இடங்களில் 1 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடியதாகவும் இருந்துள்ளது. வழக்கமான டீசல் (ப்ரீமியம் அல்லாத) மட்டுமே நிரப்பபட்டு லிட்டருக்கு 42.89 கிலோ மீட்டர் என, 66 லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 831 கிலோ மீட்டர் மைலேஜ் அடையப்பட்டுள்ளது. இந்த பயணித்தின் போது, மணிக்கு 80 கிலோ மீட்டர் என்ற வேகத்தை அவர் பின்பற்றியுள்ளார்.
2,831 கி.மீ., எப்படி சாத்தியமானது?
உலக சாதனையை நிகழ்த்தியதை தொடர்ந்து, இது எப்படி சாத்தியமானது என மைகோ சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி,
- டயர்களின் சரியான அளவில் காற்றின் அழுத்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- நன்கு ஓய்வு எடுத்த பிறகே அடுத்தடுத்த பயணங்களை தொடர வேண்டும்
- போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை கணித்து வேகத்தை குறைத்து அதிகமுறை ப்ரேக் அடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்
- எகோ மோடை பயன்படுத்தி ஆக்சிலரேட்டரை சீராக அழுத்தங்கள்
- நிலையான வேகத்தை பராமரிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா சூப்பர்ப் இன்ஜின் விவரங்கள், இந்திய வெளியீடு:
ஸ்கோடாவின் புதிய தலைமுறை சூப்பர்ப் கார் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் 148bhp மற்றும் 360Nm ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும். அதற்கு ஏதுவாக 7 ஸ்பீட் DSG ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனும், ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அம்சமும் வழங்கப்படுகிறது. ஆயிரத்து 590 கிலோ எடைகொண்ட இந்த காரை, 4X4 லே-அவுட்டில் இந்திய சந்தையில் சந்தைப்படுத்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாலை சோதனைகளும் தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தலாம். முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதால், இதன் விலை ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய தலைமுறை சூப்பர்ப் கார் மாடலில் மறுவடிவமைக்கப்பட்ட வெளிப்புற டிசைன், உட்புறத்தில் சில ஃபிஷிகல் பட்டன்கள் மற்றும் 13 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





















