Mercedes-Benz CLA EV: 3 வேரியண்ட், 792KM ரேஞ்ச், 6.7 விநாடிகளில் 100-ஐ தொடுமாம் - மெரிசிடஸின் புதிய மின்சார கார்
Mercedes-Benz CLA EV: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய மின்சார கார் மாடலான CLA EV-வை, இந்திய சந்தையில் 3 வேரியண்ட்களில் 55 லட்சம் என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Mercedes-Benz CLA EV: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சார கார் மாடலான CLA EV, ஒரே சார்ஜில் 792 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடஸ் பென்ஸின் புதிய எண்ட்ரி லெவல் கார்:
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய காரான CLA EV மாடலை, 55 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளூரில் அந்த நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் வாகனமாகவும் இது உருவெடுத்துள்ளது. அதாவது ப்ராண்டின் A-Class லிமோசைன், EQA மற்றும் EQB ஆகிய மின்சார கார் மாடல்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. CLA என்ற பெயர் இந்தியாவிற்கு புதியது இல்லை என்றாலும், மின்சார எடிஷனில் இங்கு வருவது இதுவே முதல்முறையாகும். சர்வதேச சந்தையில் இந்த மாடலானது ஹைப்ரிட் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. புதிய மின்சார காருக்கான முன்பதிவு கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கியதிலிருந்து, இதுவரை 400 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக மெர்சிடஸ் பென்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLA EV காரின் விலை விவரங்கள்:
மெர்சிடஸ் பென்ஸின் புதிய கார் மாடலான CLA EV உள்ளூர் சந்தையில் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. CLA EV-யின் சிறப்பு லாஞ்ச் எடிஷனானது வெளிப்புறத்தில் மேட் ப்ளாக் வண்னத்தையும், பெரிய 19 இன்ச் அலாய் வீல்களையும், உட்புறத்தில் சூப்பர்ஸ்க்ரீன் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. கூடுதலாக ஒளிரூட்டப்பட்ட டோர் சில்கள், இந்த எடிஷனுக்கு என தனித்துவமான ஆம்பியண்ட் லைட்டிங், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ட்ரிம் மெட்டீரியல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
| வேரியண்ட்கள் | விலை (எக்ஸ்-ஷோரூம்) |
| CLA ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் ப்ரோக்ரசிவ் லைன் | ரூ.55 லட்சம் |
| CLA 250+ லாங் ரேஞ்ச் AMG லைன் | ரூ.59 லட்சம் |
| CLA 250+ லாங் ரேஞ்ச் லாஞ்ச் எடிஷன் | ரூ.64 லட்சம் |
CLA EV - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்
CLA காரின் வேரியண்ட்களானது ஸ்டேண்டர்ட் ரேஞ்சில் தொடங்குகிறது. இதில் இடம்பெறும் 58KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால், 542 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 224hp/335Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்ட மோட்டாரை கொண்டு இந்த காரானது, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7.5 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது.
டாப் வேரியண்டான 250+ லாங் ரேஞ்ச் எடிஷனானது 85KWh பேட்டரி பேக்கை கொண்டு, முழுமையாக சார்ஜ் செய்தால் 792 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டாரை கொண்டு, 272hp/335Nm ஆற்றலை உற்பத்தி செய்வதோடு வெறும் 6.7 விநாடிகளிலேயே பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுமாம்.

CLA காரின் இரண்டு வேரியண்ட்களிலும் வழக்கமான சிங்கிள் ஸ்பீட் ரிடக்ஷன் கியருக்கு மாற்றாக, போர்ஷே டேகான்ஸ்டைல் 2 ஸ்பீட் கியர்பாக்ஸை கொண்டுள்ளன. 800V ஆர்கிடெக்ட்சரல் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 320KW ரேட்டில் சார்ஜ் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்களிலேயே 300 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் அளவிற்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியுமாம். அதோடு, இந்திய சந்தைக்கு ஏற்றவாறு இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்சும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
CLA EV - டிசைன் எப்படி இருக்கு?
வித்தியாசமான மற்றும் புதுவிதமான ஏரோடைனமிக் டிசைன் காரணமாகவே இந்த CLA காரின் ரேஞ்ச் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. முந்தைய எடிஷனை காட்டிலும் (25 மில்லி மீட்டர் அகலம், 25 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 30 மில்லி மீட்டர் நீளம்) புதிய மாடல் அளவீடுகளிலும் பெரிய அளவில் உள்ளது. எதிர்க்காற்றை எளிதில் கிழித்து செல்வதற்காக முன்புறத்தில் தீவிரமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ப்ராண்டின் லோகோவானது லைட்டிங் எலிமெண்ட்களுடன் வழங்கப்பட்டுள்ளது. நுணுக்கமான முகப்பு விளக்குகள், டெயில் லைட்கள் மற்றும் க்ரில்லில் வழங்கப்பட்டுள்ள நட்சத்திர வடிவிலான சிறிய விளக்குகள் கவனத்தை ஈர்க்கின்றன. லாங் ரேஞ்ச் வேரியண்டானது கூடுதலாக பம்பர் மற்றும் வீல்களில் கூடுதல் ஸ்போர்டியர் தன்மையை கொண்டுள்ளது. முந்தைய எடிஷனை நினைவுகூறும் விதமாக கூபே மாதிரியான டேபரிங் ரூஃப்லைன், ஃப்ரேம்லெஸ் டோர்கள், ஆரோ ஆப்டிமைஸ்ட் 18 இன்ச் AMG அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

CLA EV - அம்சங்கள், வசதிகள்
CLA மின்சார காரில் தொழில்நுட்ப அம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. நிலையானவையாக டேஷ்போர்டு முழுவதும் நீண்டு செல்லும் ஒரு முழு அகல பேனல் உள்ளது. அதில் 14-இன்ச் செண்ட்ரல் டச்ஸ்க்ரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே மற்றும் உடன் பயணிப்பவர் பக்கத்தில் ஒளிரும் மூன்று முனை நட்சத்திரங்களின் தொகுப்பு ஆகியவை அடங்கும். AMG லைன் ஸ்டைலிங் பேக்கேஜுடன், 250+ லாங் ரேஞ்ச் மாடலில் தட்டையான அடிப்பகுதியைக் கொண்ட AMG ஸ்டீயரிங் வீல், மெட்டல் பெடல்கள் மற்றும் AMG இருக்கை உறைகள் ஆகியவை கிடைக்கின்றன. அதேநேரம், லான்ச் எடிஷன் வேரியண்டில் மூன்று திரை அமைப்பைக் கொண்ட மெர்சிடிஸின் சூப்பர்ஸ்கிரீன் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்க சொகுசு வசதிகளில், மின்சாரத்தால் இயங்கும், சூடாக்கும் மற்றும் மசாஜ் செய்யும் முன் இருக்கைகள் (வெண்டிலேடட் வசதி இல்லை), டூயல் ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், ஒரு பரந்த சன்ரூஃப், பர்மெஸ்டர் 3D ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 6 ஏர்பேக்குகள், ஆட்டோமேடிக் பார்க் அசிஸ்ட், 360-டிகிரி பார்க்கிங் கேமரா, லெவல் 2+ ADAS, செமி-அடோனமஸ் ஓட்டும் திறன்கள் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. CLA-வின் பூட் ஸ்பேஸ் 405 லிட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது.கூடுதலாக 101 லிட்டர் சேமிப்பு இடத்தை வழங்கும் ஃபிரங்கையும் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பேட்டரிக்கு 8 ஆண்டுகள்/1,60,000 கி.மீ. உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்த விலைப் பிரிவில், மெர்சிடிஸ்-பென்ஸ் CLA EV காருக்கு BYD சீல் செடான் போட்டியாக அமைந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























