Flex Fuel Vehicle: சும்மாவே பேய் விற்பனை, ஃப்ளெக்ஸ் எரிபொருளில் ஹேட்ச்பேக்கை களமிறக்கும் மாருதி.. மைலேஜ் தாறுமாறு
Maruti Suzuki FFV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் நெகிழ்வு எரிபொருள் கார், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Maruti Suzuki FFV: மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் நெகிழ்வு எரிபொருள் கார் மாடலாக, வேகன் ஆர் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
மாருதியின் நெகிழ்வு எரிபொருள் கார்:
மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த சில மாதங்களில் உள்நாட்டில் ஃப்ளெக்ஸ் எரிபொருள் கார்களின் உற்பத்தியை தொடங்குமென, தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்குவது இந்திய சந்தையில் கார்பன் நடுநிலைமையை அடைவதற்கான பிராண்டின் நீண்டகால தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும். எத்தனால் உள்ளிட்ட பல்வேறு எரிபொருள் கலவைகளில் இயங்குவதால், பாரம்பரிய பெட்ரோல் இன்ஜின்களுக்கு மாற்றாக ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்கள் கருதப்படுகின்றன. சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தரப்பில் வெளியாகியுள்ள தகவலில், ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிதியாண்டிற்குள் அவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பயோகேஸ் உற்பத்தி திட்டம்
இந்தியாவில் கார்பன் நடுநிலைமை பயணத்தில் நிறுவனத்தின் முக்கிய பணிகளில் ஒன்று பயோகேஸ் வணிகம் என்று சுசூகி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து செயல்படத் தொடங்கும் பயோகேஸ் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக, பால் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறடு. இந்த பயோகேஸ் ஆலைகள் இந்தியாவின் 300 மில்லியன் கால்நடைகளின் எருவை பயோகேஸாக மாற்றும், இது ஒரு கரிம உரமாகவும் கார்பன் நடுநிலை எரிபொருளாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பயோகேஸ், சிறந்த மைலேஜ், அதிக எரிபொருள் விலை மற்றும் சுத்தமான இயக்கம் காரணமாக ஏற்கனவே அதிக தேவை உள்ள மாருதி சுசுகியின் சிஎன்ஜி-இயங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும். மாருதி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் மூன்றில் ஒரு கார் சிஎன்ஜி எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனம்:
மாருதியின் போர்ட்ஃபோலியோவில் தற்போது கிடைக்கும் மொத்த கார்களுமே E20 எரிபொருளுடன் இணக்கமானதே ஆகும். இந்நிலையில் 85 சதவிகிதம் வரை பயோ எத்தனாலை ஆதரிக்கக்கூடிய ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியில் நிறுவனம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில், ஃப்ளெக்ஸ்-எரிபொருள் எடிஷனில் தயாராக உள்ள வேகன் ஆர் ஹேட்ச்பேக்கின் முன்மாதிரியை நிறுவனம் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனத்தின் அம்சங்கள் என்ன?
இது E20 (20 சதவீதம் எத்தனால்) முதல் E85 (85 சதவீதம் எத்தனால்) வரை பெட்ரோல்-எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கக்கூடிய பிராண்டின் முதல் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனமாக சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம். தோற்றம் மட்டுமின்றி அதன் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் தற்போதைய வேகன் ஆர் எடிஷனை போன்றே இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஃப்ளெக்ஸ் எரிபொருள் E85 எரிபொருளில் இயங்கும் போது டெயில்பைப் உமிழ்வை 79 சதவீதம் குறைக்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த உமிழ்வு இருந்தபோதிலும், செயல்திறன் சமரசம் செய்யப்படாது மற்றும் ஹேட்ச் நிலையான பெட்ரோல்-மட்டும் மாடலைப் போலவே அதே சக்தியை வழங்கும். வேகன் ஆர், CY 2026 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.





















