Kawasaki Versys 650 : வெர்சிஸ் 650 பைக் விற்பனையைத் தொடங்கியது கவாசகி.. இதெல்லாம் ஸ்பெஷல்தான்..
புகழ்பெற்ற நிறுவனமான கவாசகி அதன் புதிய மாடலான கவாசகி வெர்சிஸ் 650க்கான விற்பனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
புகழ்பெற்ற நிறுவனமான கவாசகி அதன் புதிய மாடலான கவாசகி வெர்சிஸ் 650க்கான விற்பனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
புதிய அறிமுகம்:
அதிவேக ஸ்போர்ட்ஸ் ரக இருச்சக்கர வாகனங்களின் தயார்பிப்பிற்கு பெயர்போன நிறுவனம் கவாசகி. இதன் தயாரிப்புகள் இந்திய இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. கவாசகி பைக்குகளுக்கு இந்தியாவில் மவுசு இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக அதன் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கவாசகி வெர்சிஸ் 650 என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனமானது வெர்சிஸ் 1000 பைக்கின் மாடலைத் தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இதன் சிறப்பம்சங்களாக, 4.3 இன்ச் டிஜிட்டல் டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ருமெண்டேஷனானது, ஸ்மார்ட் போனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது இதற்கு முந்தைய மாடல்களில் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 17 இன்ச் சக்கரங்கள் மற்றும் மெல்லிய பெட்ரோல் டேங்க், அகலமான ஹேண்டில் பார், வாட்டர் ரெசிஸ்டண்ட்டுடன் கூடிய யுஎஸ்பி போர்ட், டிசி மின் இணைப்பு, கவசகி ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் இரண்டு வகையான பயண மோட்களைக் கொண்டுள்ளது.
649 சிசி எஞ்சின்:
இந்த பைக்கானது, 649 சிசி கொண்ட லிக்விட் கூல் 4 ஸ்ட்ரோக் பேரலல் ட்வின் எஞ்சின் 8 வால்வுகளுடன் வருகிறது. ஃபூயல் இஞ்சக்ஷன், டிஜிட்டல் லாக் அன்லாக், எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகியவற்றைக் கொண்டது. இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மில்லி மீட்டராகவும், சீட்டின் உயரம் 845 மில்லி மீட்டராகவும் உள்ளது. 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், டூயல் 300 மில்லிமீட்டர் பெடல் ஸ்டைல் டிஸ்க் ப்ரேக் முன்பக்கமும், சிங்கிள் 250 மில்லிமீட்டர் டிஸ்க் பின்பக்கமும் கொண்டுள்ள இந்த வாகனம் மொத்தமாக 219 கிலோ எடையைக் கொண்டுள்ளது.
விலை:
6 கியர்களைக் கொண்டுள்ள இது, 49 கிலோ வாட் மற்றும் 8,500 ஆர்பிஎம் பவர், 61 என் எம் டார்க் இந்த வாகனத்திற்கு சக்தியை கொடுக்கிறது. லைம் க்ரீன் மற்றும் மெட்டாலிக் பேண்டோம் சில்வர் என்று இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது. இந்த வாகனத்தின் விலை 7.36 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஆன்ரோட் விலை 7.50 லட்சத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
சுசுகியுடன் போட்டி:
இருச்சக்கர வாகனத்துடன் சேர்த்து, டீ கப், பேக், வாகனத்திற்கு தேவையான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ், வாட்ச், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறது கவாசகி நிறுவனம். வாசகி வெர்சிஸ் 650யானது தற்போது விற்பனையில் உள்ள ட்ரையும்ப் டைகர் ஸ்போர்ட் 660 மற்றும் சுசுகி வி ஸ்ட்டோம் 650 எக்ஸ்டி ஆகிய வாகனங்களுக்குப் போட்டியாக இருக்கும்.