Tata JLR: யாரு பார்த்த வேலை? டாடாவை சுத்துப்போட்ட சைபர் அட்டாக்.. உற்பத்தி நிறுத்தம், ரூ.21,000 கோடி அம்பேல்
Tata JLR Cyber Attack: டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ப்ராண்ட் கார் உற்பத்தி, சைபர் தாக்குதல் காரணமாக ஒருமாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tata JLR Cyber Attack: டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ப்ராண்ட் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவரில் சைபர் அட்டாக்:
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனம், சைபர் தாக்குதல் காரணமாக கிட்டத்தட்ட ஒருமாத காலமாக தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. இந்த பிரச்னைக்கான முழு தீர்வு எட்டப்பாடத நிலையில், உலகளவியா தனது ஆலைகளில் வாகன உற்பத்தியை அக்டோபர் 1 ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள மெர்சிசைடு, மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள சோலிஹல் மற்றும் இந்தியா, ஸ்லோவாக்கியா மற்றும் சீனாவில் உள்ள ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதை ஜாகுவார் லேண்ட் ரோவர் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “பாதுகாப்பான முறையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதை உறுதி செய்வதற்காக, சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், என்.சி.எஸ்.சி மற்றும் சட்ட அமலாக்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக” ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் நடத்தியது யார்?
ஜாகுவார் லேண்ட் ரோவர் மீதான சைபர் தாக்குதலுக்கு ஸ்காட்டேர்டு லாப்சஸ்$ ஹண்டர்ஸ் என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு ஹேக்கர் குழு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் கோ-ஆப் உள்ளிட்ட முக்கிய இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்களை குறிவைத்து இந்த குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஆலைகளில் மட்டுமின்றி, விநியோக சங்கிலியில் பணிபுரியும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1ம் தேதி நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கும் என்பதும் சந்தேகம் தான் எனவும், நவமபர் மாதம் வரை இந்த சூழல் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரூ.21,000 கோடி அம்பேல்...
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெற்ற சைபர் தாக்குதலை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், நாளொன்றிற்கு 5 முதல் 10 மில்லியன் பவுண்டுகள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாத காலத்திற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 150 முதல் 300 மில்லியன் பவுண்டுகள் அதாவது ஆயிரத்து 800 கோடி முதல் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்ளக்கூடும். உற்பத்தியை நிறுத்துவதோடு, விற்பனையை சீர்குலைக்கவும், சப்ளையர்களுக்கு பணம் செலுத்துவதை தாமதப்படுத்தவும் கட்டாயப்படுத்திய இந்த தாக்குதலால் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.21 ஆயிரம் கோடி இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் அளவு வீழ்ச்சி காண்பதோடு, அடுத்த காலாண்டிற்கான விநியோகத்திலும் சிக்கல் ஏற்படக் கூடும் என கருதப்படுகிறது. டாடா மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த வருவாயில் ஜாகுவார் லேண்ட் ரோவர் 70% பங்களிப்பது குறிப்பிடத்தக்கது.
டேமேஜ் ஆகும் டிசிஎஸ் ப்ராண்ட்...
இந்த சைபர் தாக்குதலால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதிக்கப்படுவதோடு, டாடா குழுமத்தின் கீழ் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் மதிப்பையும் கெடுக்கிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு பணிகளை டிசிஎஸ் நிறுவனமே மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் சொந்த குழுமத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் தரவுகளையே பாதுகாக்க முடியாதது அதன் மதிப்பை பாதித்துள்ளது. அதுபோக, அந்த பாதிப்பை சரிசெய்ய சுமார் ஒரு மாத காலம் என்ற அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்வதும் நிறுவனத்தின் திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது. தொடர்ந்து, அவர்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு கூடுதல் நாளும், டிசிஎஸ் எனும் மிகப்பெரிய ப்ராண்டிற்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இருப்பினும், படிப்படியாக கட்டுப்பாடுகளை மீட்டு வருவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.





















