Hyundai Creta: 1.6 லிட்டர் டர்போ இன்ஜினில் க்ரேட்டா, ரெடி மோடில் புதிய எடிஷன், மைலேஜ்+, இவ்ளோ கம்மி விலையா?
Hyundai Creta N Line Turbo Engine: ஹுண்டாய் க்ரேட்டா N லைன் கார் மாடலின் டர்போ இன்ஜின் எடிஷன், விரைவில் ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Hyundai Creta N Line Turbo Engine: ஹுண்டாய் க்ரேட்டா N லைன் கார் மாடலின் டர்போ இன்ஜின் எடிஷன், ரூ.31.15 லட்சம் விலையில் சந்தைப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹுண்டாய் க்ரேட்டா N லைன்:
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் க்ரேட்டாவின் என் லைன் எடிஷனானது, ஸ்போர்ட்டி லுக் மற்றும் தோற்றத்திற்காக மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், அதன் புதிய எடிஷனை மேலும் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் செயல்திறனுடன் சந்தைப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. புதிய க்ரேட்டா என் லைன் கார் மாடலானது அண்மையில் பிரேசில் சாலைகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது புகைப்படங்களில் சிக்கியது. அதனடிப்படையில் சிக்கிய தகவல்களின் மூலம், எஸ்யுவி பிரியர்களை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஹுண்டாய் க்ரேட்டா N லைன்: புதிய இன்ஜின்
பிரேசிலில் சாலை பரிசோதனையில் சிக்கிய க்ரேட்டாவின் புதிய என் லைன் எடிஷனானது 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளதாம். இந்த இயந்திரமானது 193PS மற்றும் 265Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதில் இடம்பெறும் என கூறப்படும் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆனது, மென்மையான கியர் மாற்றம் மற்றும் அதிவேகமான பயண அனுபவத்தை மேம்படுத்தும். அதேநேரம், பிரேசிலில் விற்பனை செய்யப்படும் தற்போதைய க்ரேட்டா என் லைன் எடிஷனானது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து 120PS மற்றும் 172Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதிலிருந்து 1.6 லிட்டர் டர்போ இன்ஜினுக்கு மாறுவது என்பது, செயல்திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஹுண்டாய் க்ரேட்டா N லைன்: டிசைன் அப்டேட்
பிரேசிலில் எந்தவித மறைப்பான்களும் இன்றி முற்றிலும் திறந்து வைத்த நிலையில் சோதனை செய்யப்பட்டதால், க்ரேட்டா என் லைன் எடிஷனின் பல்வேறு முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன. பெரும்பாலான ஸ்டைலிங் அம்சங்களானது தற்போதுள்ள எடிஷனிலிருந்து அப்படியே தொடர்கிறது. அதேநேரம், சில அப்டேட்களும் உள்ளன. அதிக திறன் கொண்ட இன்ஜின் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், பின்புற கதவில் 1.6 -TGDI எனும் பேட்ஜ் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இடம்பெற்று இருந்த அலாய் வீல்களை, புதிய பேட்டர்னில் 18 இன்ச் டிசைனாக ஹுண்டாய் மாற்றியுள்ளது. முந்தைய பிரேசில் க்ரேட்டா என் லைன் எடிஷனானது 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எல்இடி விளக்குகள், சிக்னேட்சர் என் லைன் க்ரில், ஸ்போர்ட்டி பம்பர்ஸ் ஆகிய பெரும்பாலான வெளிப்புற டிசைன்கள் அப்படியே தொடர்கின்றன.
ஹுண்டாய் க்ரேட்டா N லைன்: எதிர்பார்க்கப்படும் விலை
பிரேசில் சந்தையில் புதிய க்ரேட்டா என் லைன் 1.6 -TGDI எடிஷனின் விலை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.31.15 லட்சம் வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பிரேசிலில் தற்போதுள்ள டாப் என்ட் க்ரேட்டா 1.6 -TGDI அல்டிமேட் வேரியண்ட்டின் விலை ரூ.30.85 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போதைய க்ரேட்டா என் - லைன் 1.0 லிட்டர் டர்போ எடிஷனின் விலை ரு.29.39 லட்சமாகும். மேம்படுத்தப்பட்ட பவர்ட்ரெயின் மற்றும் காஸ்மெடிக் அப்கிரேட்கள் காரணமாக செயல்திறனை எதிர்பார்க்கும் பயனாளர்களுக்கு புதிய காரின் அதிகபட்ச விலை நியாயமானதாக இருக்கலாம்.
பிரேசிலில் தற்போதுள்ள எடிஷன் லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கி வரும் நிலையில், புதிய எடிஷன் 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுண்டாய் க்ரேட்டா N லைன்: இந்திய வெளியீடு எப்போது?
க்ரேட்டா என் லைனின் புதிய எடிஷன் பிரேசிலில் சாலை பரிசோதனையில் ஈடுபட்டாலும், இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தற்போது வரை எந்தவித தகவலும் இல்லை. அதேநேரம், இந்திய சந்தையில் க்ரேட்டா பெரும் வரவேற்பை கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் இந்த புதிய 1.6 -TGDI எடிஷனும் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படலாம். அதுநாள் வரையில், தற்போது உள்நாட்டு சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள என் லைன் எடிஷனை ஹுண்டாய் தொடர்ந்து விற்பனை செய்ய உள்ளது.





















