Honda Amaze: என்ன குறை வெச்சோம்? சீண்டாத மக்கள், கைவிடப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் - காரணம் என்ன?
Honda Amaze Discontinued: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரின் குறிப்பிட்ட வேரியண்ட் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Honda Amaze Discontinued: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா அமேஸ் காரின் குறிப்பிட்ட வேரியண்ட் நீக்கப்பட்டதற்கான காரணம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
அமேஸ் வேரியண்டை கைவிட்ட ஹோண்டா:
இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் மாடலின் VX வேரியண்ட் உற்பத்தியை நிறுத்த, ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி இரண்டாம் தலைமுறை அமேஸில் S வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தலைமுறை அமேஸ் கார் மாடல் அறிமுகப்பட்டதன் விளைவாகவே, தற்போது VX வேரியண்ட் கைவிடப்படுவதாக கூறப்படுகிறது. புதிய எடிஷனானது V, VX மற்றும் ZX ஆகிய 3 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓட்டுனருக்கான உதவி சிஸ்டம் உட்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு, உயர்தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு மலிவு விலையில் கிடைக்கும் காராக உருவெடுத்துள்ளது. மூன்றாம் தலைமுறை அமேஸ் கார் மாடலின் விலை ரூ.8.19 லட்சத்தில் தொடங்கி ரூ.11.20 லட்சம் வரை நீள்கிறது.
காரணம் என்ன?
ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் மொத்தமாக 4,871 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 3,360 உள்நாட்டு விற்பனையும் 1,511 ஏற்றுமதிகளும் அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது உள்நாட்டு விற்பனையில் 22.75% சரிவு ஏற்பட்டுள்ளது. புதிய ஹோண்டா அமேஸ் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்த விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணகமாக சந்தை சூழலை உணர்ந்து முதலீடு செய்யவும், விற்பனையாகாத பழைய மாடல்களை கைவிட்டு அதன் மீதான உற்பத்தி செலவை சேமிக்கவுமே, இரண்டாம் தலைமுறை அமேஸின் VX ட்ரிம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் தலைமுறை அமேஸ் விவரங்கள்:
கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் மாடலானது, 2021ம் ஆண்டு ஃபேச்லிஃப்ட் பெற்றது. ஆரம்பத்தில் இது E, S மற்றும் VX என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது. 2023ம் ஆண்டில் E வேரியண்ட் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான் இரண்டு வருடங்களுக்குப் பிறகு VX வேரியண்டும், ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் தலைமுறை அமேஸ் காரில் S வேரியண்ட் மட்டுமே தற்போது விற்பனையில் உள்ளது. மூன்றாம் தலைமுறை அமேஸிலும் VX வேரியண்ட் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், புதிய அமேஸ் கார் மாடலின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் தான், இந்த முடிவை ஹோண்டா நிறுவனம் எடுத்ததாக கூறப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் 2021 - S வேரியண்ட்:
இரண்டாவது தலைமுறை அமேஸின் S வேரியண்டில் 89bhp மற்றும் 110 Nm டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 5 ஸ்பபீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது CVT ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.7.63 லட்சத்திலிருந்து ரூ.8.53 லட்சம் வரை நீள்கிறது.
S வேரியண்ட் அம்சங்கள்:
உட்புறத்தில் ஆக்ஸ் -இன் உடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட 2DIN LCD ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ப்ளூடுத் மற்றும் யுஎஸ்பி கனெக்டிவிட்டி, ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ, ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெலிபோன் கண்ட்ரோல்ஸ், டில்ட் அட்ஜெஸ்டபிள் ஸ்டீயரிங் வீல், ஹைட் அட்ஜெஸ்டபள் ட்ரைவர்ஸ் சீட் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக கப்ஹோல்டருன் கூடிய ரியர் செண்டர் ஃபோல்டபள் ஆர்ம்ரெஸ்ட், முன் மற்றும் பின்புற அக்செசரி சாக்கெட்ஸ், இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் போன்ற அம்சங்களும் உள்ளன.
மூன்றாவது தலைமுறை அமேஸின் தாக்கம்:
மூன்றாவது தலைமுறை அமேஸ் ஆனது மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட காம்பேக்ட் செடானாக சந்தையில் அறிமுகமானது. அதன்படி ADAS தொழில்நுட்பத்தை கொண்டிருந்தும், போட்டித்தன்மை மிக்க விலையில் சந்தைப்படுத்தப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, எல்இடி லைட்டிங், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ரொஜெக்டர் ஃபாக் லேம்ப்ஸ், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், செமி டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், லேன் வாட்ச் கேமரா என ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.





















