Sept Car Launch: செப்டம்பரில் களைகட்டப்போகும் ஆட்டோமொபைல் சந்தை - புது எஸ்யுவி தொடங்கி அட்டகாசமான ஸ்கூட்டர் வரை
Sept 2025 Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Sept 2025 Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
செப்டம்பரில் புதிய கார், பைக்குகள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் செப்டம்பர் மிகவும் தீவிரமான மாதமாக இருக்கப் போகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய கார்கள் மற்றும் மோட்டர்சைக்கிள்களை சந்தைப்படுத்தப்பட உள்ளன. முற்றிலுமான மின்சார எஸ்யுவிக்கள், செயல்திறன் சார்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் முற்றிலும் புதிய எஸ்யுவி ஆகியவை பயனர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்களாக மாற உள்ளன. இதில் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மற்றும் மாருதி சுசூகி நிறுவனங்களின் முதல் மின்சார வாகனங்கள், க்ரேட்டாவிற்கு போட்டியான மாருதியின் புதிய எஸ்குடோ ஆகியவற்றுடன், டிவிஎஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களும் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
1 & 2. வின்ஃபாஸ்ட் VF6 & VF7:
வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் தனது VF6 மற்றும் VF7 கார் மாடல்களை வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முதல் மாடல் ஹுண்டாயின் க்ரேட்டா, MG ZS EV மற்றும் மஹிந்த்ரவின் BE 6 ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. 59.6KWh பேட்டரி பேக்கை கொண்டு 480 ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், VF7 கார் மாடலானது டாடா ஹாரியர் மற்றும் மஹிந்த்ராவின் XEV 9e ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. 70.8KWh பேட்டரி பேக்கை கொண்டு 450 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.
3. மாருதி எஸ்குடோ எஸ்யுவி
மாருதி நிறுவனம் தனது எஸ்யுவி லைன் - அப்பை விரிவுபடுத்தும் விதமாக, புதிய மிட்சைஸ் எஸ்யுவியை வரும் செப்டம்பர் 3ம் தேதி சந்தைப்படுத்த உள்ளது. எஸ்குடோ என பெயர் சூட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இந்த காரானது, அரேனா டீலர்ஷிப்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது. க்ராண்ட் விட்டாராவின் பிளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களை பெற்றாலும், அதனை காட்டிலும் எஸ்குடோ கூடுதல் நீளமாக இருக்கும் என கூறப்படுகிறது. வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் பெறக்கூடுமாம். க்ராண்ட் விட்டாரவை காட்டிலும் கூடுதல் அம்சங்களை பெறக்கூடும் என நம்பப்படும், எஸ்குடோவின் விலை 10 லட்ச ரூபாயிலிருந்து தொடங்க வாய்ப்புள்ளதாம். ஹூண்டாயின் க்ரேட்டாவுடன் இந்த கார் சந்தையில் போட்டியிட உள்ளது.
4. மஹிந்த்ரா தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்த்ராவின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் முதன்மையானதாக உள்ள தார் 3 டோரின்,ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் செப்டம் முதல் வாரத்தில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. சாலை சோதனையின் போது அடிக்கடி காணப்பட்ட புதிய எடிஷனானது, தோற்ற அடிப்படையில் வெளிப்புறத்தில் மட்டுமின்றி உள்ளேயும் சில லேசான மாற்றங்களை பெற உள்ளது. பெரும்பாலான மாற்றங்கள் புதிய 5 டோர் தார் ராக்ஸ் அடிப்படையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேபினில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ப்ரீமியம் அம்சங்களை பெற உள்ளது. மெக்கானிக்கல் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன், ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் அம்சங்களை அப்படியே தொடர உள்ளது.
5. சிட்ரோயன் பசால்ட் X
சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய பசால்ட் X கார் மாடலுக்கான முன்பதிவை ஆகஸ்ட் 22ம் தேதி, ரூ.21 ஆயிரம் என்ற தொகையுடன் தொடங்கியது. சிட்ரோயன் 2.0 என்ற வியூகத்தின் அடிப்படையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்தில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படும், இந்த காரானது பசால்ட் ரேஞ்சின் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசர் மூலம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்களின்படி, பசால்ட் X கார் மாடலானது கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய வண்ண விருப்பங்களை பெற உள்ளது. இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, பெட்ரோல் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெற உள்ளது.
6. மாருதி சுசூகி இ - விட்டாரா
மாருதியின் முதல் மின்சார கார் மாடலான இ-விட்டாராவின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 3ம் தேதி இந்த கார் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்த காரானது, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதில் 49KWh மற்றும் 61.1KWh பேட்டரி பேக் என இரண்டு ஆப்ஷன்கள் பெறப்பட உள்ளன. சிறிய பேக்கானது 344 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குமென கூறப்படுகிறது. பெரிய பேட்டரி பேக்கானது இரண்டு ட்ரைவ் அம்சங்களில் வழங்கப்படுகிறது. அதன்படி, ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் 426 கிலோ மீட்டர் ரேஞ்சையும், ஆல் வீல் ட்ரைவ் 395 கிலோ மீட்டர் ரேஞ்சையும் அளிக்கும் என கூறப்படுகிறது.
7. TVS Ntorq 150:
டிவிஎஸ் நிறுவனம் 150சிசி செக்மெண்டில் வலுவாக கால் பதிக்கும் விதமாக, Ntorq ஸ்கூட்டரின் 150சிசி எடிஷனை செப்டம்பர் 4ம் தேதி சந்தைப்படுத்த உள்ளது. Ntorq ஸ்கூட்டருக்கே உரிய டிசைன் லேங்குவேஜை பெற்றுள்ளதோடு, T வடிவிலான முகப்பு விளக்கு மற்றும் வாகனத்தை சுற்றி எல்இடி லைட்டிங்கை பெற்றுள்ளது. உள்நாட்டு சந்தையில் யமஹா ஏரோக்ஸ் 155 , ஏப்ரிலியா SR 160 மற்றும் ஹீரோவின் Xoom 160 ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டியிட உள்ளது. Ntorq 125 ஸ்கூட்டரின் டாப் எடிஷன் விலை தற்போது 1.11 லட்சமாக உள்ளது. இதை காட்டிலும் புதிய ஸ்கூட்டரின் விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.





















