Ampire electric scooter: ஆம்பியர் பிரிவில் புதிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் .. விவரங்கள் இதோ
ஆம்பியர் பிரிவில் இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆம்பியர் எலெக்ட்ரிக் செக்மெண்ட் எனும் பெயரில், கடந்த 2008ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை தேர்வு செய்து, புதுப்புது மாடல் வாகனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது இரண்டு புதிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களை கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முதல் மாடல் ஆம்பியர் ஜீல் எக்ஸ்.
ஆம்பியர் ஜீல் எக்ஸ்:
புதிய ஆம்பியர் ஜீல் எக்ஸ் மாடல், சிறந்த என்ட்-ரி லெவல் மாடலாக கருதப்படுகிறது. இதில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.ஈ.டி முகப்பு விளக்கு, டிரம் பிரேக் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வாகனத்தை செலுத்த முடியும். அதிகபட்சமாக 150 கிலோ எடை வரையில் ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் திறன்:
60 வோல்ட்ஸ் மற்றும் 2.3 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட லித்தியம் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
விலை விவரம்:
இந்திய சந்தையில் புதிய ஜீல் எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் விலை 75 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும், ரூ.69,900-க்கும் புதிய மாடல் விற்பனை செய்யப்படுகிறது. 3 வருடங்களுக்கு வாரண்டி வழங்கப்படும் இந்த வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரைமஸ் ஹை-ஸ்பீடு மாடல்
பிரைமஸ் ஹை-ஸ்பீடு எனும் புதிய மாடல் மின்சார ஸ்கூட்டரும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 கிலோவாட் PMS மோட்டார் கொண்டுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளில் எட்டிவிடும். புதிய பிரைமஸ் மாடல் - இகோ, சிட்டி, பவர் மற்றும் ரிவர்ஸ் என நான்குவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் பவர் மோடில் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதோடு, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலி வழங்கப்பட்டுள்ளது. ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஹிமாலயன் வைட், ராயல் ஆரஞ்சு, ஹேவ்லாக் புளூ மற்றும் பக் பிளாக் என நான்கு விதமான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட டூயல் டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஹார்டுவேரை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங் மற்றும் டிரம் பிரேக்குகளை கொண்டுள்ளன. ஸ்டைலிங்கை பொருத்தவரை டால்-செட் ஹெட்லைட், அப்ரனில் மவுண்ட் செய்யப்பட்ட முன்புற இண்டிகேட்டர்கள், ஸ்டெப்-அப் சீட் மற்றும் ஒற்றை கிராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது.