அட்சய திருதியை நாளில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்? இந்த வருடம் எப்போது தங்கம் வாங்கலாம்?
எது அழியாமல் பல்கிப் பெருகுகிறதோ அதுவே அட்சயம் எனப்படும். இந்த நாளில் வாங்கும் எதுவும் வாழ்வில் குறைவில்லாது நிறைந்திருக்கும் என்பது ஐதிகம்.
அட்சய என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம். நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது திரௌபதி சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரத்தைப் பெற்ற நாள் அட்சய திரிதியை என்று சொல்லப்படுகிறது. இது இந்து மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மரால் உலகம் உருவாக்கப்பட்ட நாள் அட்சய திருதியை என இந்து மக்களால் நம்பப்படுகிறது. மேலும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
'‘சயம்’ என்றால் அழிதல். ‘அட்சயம்’ என்றால் அழியாதது அல்லது குறையாதது என்று பொருள். எது அழியாமல் பல்கிப் பெருகுகிறதோ அதுவே அட்சயம் எனப்படும். இந்த நாளில் வாங்கும் எதுவும் வாழ்வில் குறைவில்லாது நிறைந்திருக்கும் என்பது ஐதிகம். அதனால்தான் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் இந்து மக்கள் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது வழக்கம். அதாவது, அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, நகைகள் வாங்கினால் அவை பல்கி பெரும் என நம்பப்படுகிறது. எனவே, அட்சய திருதியை பண்டிகையின்போது தங்கம், வெள்ளி மற்றும் நகை வியாபாரம் களைகட்டும். மகாலட்சுமி தங்கத்தில் வாசம் செய்வதாக ஐதிகம். ஆனால், தங்கத்தில் மட்டுமல்ல... மேலும் பல்வேறு பொருள்களில் அன்னையின் சாந்நித்தியம் நிறைந்து விளங்கிறது.
அட்சய திருதியை நாளில் அந்தப் பொருள்களையும் வாங்குவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் சாந்நித்தியத்தை நம் வீட்டுக்கு அழைக்கலாம். இந்த ஆண்டு மே 3ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட இருக்கிறது. அட்சய திருதியை நாள் வீட்டுக்கும், குடும்பத்துக்கும் அதிர்ஷ்டம் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் (மே 3) நல்ல நேரம் அதிகாலை 5.18 மணிக்கு தொடங்கி மே 4ஆம் தேதி காலை 7.32 மணிக்கு முடிவடைகிறது. மே 3ஆம் தேதி லக்ஷ்மியையும், விஷ்ணுவையும் வழிபடுவதற்கு காலை 5.39 மணி முதல் 12.18 மணி வரை உகந்த நேரம். எனினும், அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதற்கு முழு நாளும் நல்ல நேரம்தான். பலர் பங்குகள் போன்ற வேறு முதலீடுகளில் பணத்தை போடுவதும் வழக்கமாகிவிட்டது.