கோலாகலமான தேனி... வீரபாண்டி ஸ்ரீ கெள மாரியம்மன் கோயில் திருவிழா: குவிந்த பக்தர்கள்!
தேனி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற அருள் மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் திருவிழா இன்று முதல் தொடங்கியுள்ளது.
சித்திரை மாதங்களில் கொண்டாடப்படும் உள்ளூர் கோயில் திருவிழாக்களில் மிகப் பெரிய கோயில் திருவிழாக்களில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவும் ஒன்று . இந்த கோயில் திருவிழாவானது வருடந்தோறும் சித்திரை மாதம் சுமார் 28 நாட்கள் நடைபெறும் . அதிலும் இறுதி ஒரு வாரம் நடக்கும் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த கோயில் திருவிழாவிற்கு தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்களும், பக்தர்களும் வருகை தருவார்கள். இந்த கோயிலின் வரலாறானது மிகவும் சிறப்பு மிக்க ஒன்றாக கருதப்படுகிறது.
சிவனை நோக்கி பெண்ணொருவர் தவம் செய்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் வந்த அரசன் ஒருவன் தவத்தில் இருந்த பெண்ணை பார்த்து காமவயப்பட்டு உள்ளார். உடனே கோபமடைந்த அந்த பெண் தர்ப்பை புல்லை எடுத்து வீசியபோது புல் திரிசூலம் ஆக மாறி அரசின் இரு கண்களையும் காயப்படுத்தியது. பின்னர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட அரசனுக்கு அந்தப் பெண் மூலம் கண்பார்வை கிடைத்ததாகவும் , இறுதியில் அந்தப்பெண் கௌமாரியம்மன் என தெரிந்ததாகவும் ஐதீக அடிப்படையில் கூறப்படுகிறது. இந்த கோயிலில் அருகில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவபெருமான் அரசனின் மற்றொரு கண்ணுக்கு பார்வை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோயில் தளம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் கூறப்படுகிறது.
சிவனை நோக்கித் தவம் இருந்ததால் கௌமாரியம்மன் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று கொடியேற்றப்பட்டு திருவிழா விரதத்துடன் ஆரம்பித்தது. தற்போது இறு வார திருவிழாவாக இன்று முதல் அடுத்து வரும் ஏழு நாட்கள் என திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாற்றில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் ஆயிரம் கண்பாணை எடுத்தும் அம்மனுக்கு செலுத்துவது மிகவும் விசேஷம் . அம்மை நோய் வந்து குணமானவர்கள் கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் உடல் பாதிப்புகள் இருப்பவர்கள் அதில் தீபமேற்றி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பாதம் முதல் தலைவரை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது இந்த தளத்தில் மிகவும் சிறப்பாக ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டாரங்களிலிருந்து உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஒரு நாள் தங்கி இருந்து கிடா வெட்டி அம்மனுக்கு படைத்துவிட்டு உணவு பரிமாறி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஏழு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள் என கோயிலில் பல்வேறு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மேற்கொண்டுவருகிறது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவல்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு கடைகள், உணவு விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்