திருப்பதி உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!
கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஜூன் 13ஆம் தேதி தான் 2 கோடி ரூபாய்க்கு காணிக்கை கிடைத்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் 2 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 55 நாட்களுக்கு பிறகு இந்த வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியிலும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதன் காரணமாக உண்டியல் வருமானமும் குறைந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், கொரோனா அதிகரிப்பால் இலவச தரிசன முறையை ரத்து செய்துள்ளது. சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தற்போது சாமியை தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக கோயில் உண்டியல் வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு உண்டியல் வருமானம் 2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 12ஆம் தேதி 15,314 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்ததன் மூலம் ரூ. 2 கோடியே 6 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 14ஆம் தேதி 13,918 பேர் சாமி தரிசனம் செய்தபோது, உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 15 லட்சமாக இருந்தது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ரூ.2 கோடியே 29 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்திருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி உண்டியல் வருமானம் 2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது” என்று கூறினார்கள்.
காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!
கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு பிறகு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் உண்டியல் வருமானம் குறைந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.
300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் சாமியை விரைவில் தரிசனம் செய்கின்றனர். கடந்த மாதத்தில் 30 நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கியூவில் நுழைந்தது முதல் எந்த தொந்தரவும், கூட்ட நெரிசலும் இல்லாமல் பக்தர்கள் நிம்மதியாக சாமியை தரிசித்து வருகின்றனர்.
முன்னதாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும், பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தினத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி