தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து.? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!எந்த எந்த மாவட்டங்களுக்கு ரிஸ்க்- வெதர்மேன் அலர்ட்
TN RAIN ALERT: தென்மேற்கு வங்ககடலில் ஜனவரி 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 13 வரை 4 நாட்களுக்கு மழை தீவிரமடைந்து காணப்படும் என டெல்டா வெதர்மேன் அலர்ட் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பமே பல மாவட்டங்களில் மழையானது கொட்டியது. இருந்த போதும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை குறிப்பிட்ட மழை அளவை விட 3% குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் வட மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் வெள்ளம் ஏற்படவில்லை. புயல் பாதிப்பும் உருவாகவில்லை. இருந்த போதும் மழையானது பரவலாக பெய்த காரணத்தால் நிலத்தடி நீர் இருப்பும், குடிநீர் ஆதாரங்களும் நிரப்பியுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ளதாக கருதப்பட்ட நிலையில், ஜனவரியில் தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் ஜனவ 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இத்தாழ்வு பகுதி தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று இலங்கை ஊடாக தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 13 வரை 4 நாட்களுக்கு ஜனவரி மழை தீவிரமடைந்து காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மழை
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டஙமாவட்டங்களில் (ஜனவரி 9,10, 11 தேதிகள்) கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதித கனமழை வரை பதிவாக கூடும் என தெரிவித்துள்ளார். எனவே டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் ஜனவரி 9 முதல் 12 வரை ஒத்திவைப்பது நல்லது, அறுவடை செய்த தானியங்களை ஜனவரி 8ம் தேதி இரவுக்குள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
வட மாவட்டங்கள் (ஜனவ 9,10 தேதிகள்)
சென்னை உள்பட வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாக கூடும். உள் மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
வட மாவட்ட விவசாயிகளும் ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் அறுவடை உள்ளிட்ட வேளாண்மை பணிகளை ஒத்திவைப்பது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்கள் (ஜனவ 10-12 வரை)
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான திருநெல்வேலி, தேனி, தென்காசி கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதிகனமழை வரை பதிவாககூடும் என கூறியுள்ளார்.





















