'கோலாகலமாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்' ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 7ந் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து இரவு யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.
7-ம் நாள் விழாவான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு மேற்கு வாயிலின் எதிரே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தேர் பூமாலைகள், வாழைத்தார்கள், ஈச்சம் மற்றும் தென்னங்குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மதியம் 1 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை பம்பை- உடுக்கை, மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் அங்கு அம்மனுக்கு மாலை அணிவித்தவுடன், தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கியஸ்தர்களுக்கு கோவில் அறங்காவலர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும், ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் கோவில் வளாகத்தைச் சுற்றி, வடக்கு வாயில் முன்பு மாலை 4.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் வேடமணிந்து வந்தவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூருவில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.