காளிகாம்பாள் கோயில் முதல் குலசை முத்தாரம்மன் கோயில் வரை- பவுர்ணமி விளக்கு பூஜையை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு
தமிழகம் முழுவதும் மற்ற 11 கோயில்களில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை காணொலி காட்சி மூலம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் நடைபெறும் 108 திருவிளக்கு பூஜையை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறைசார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்து இருந்தார்.
இதன்படி தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகிய 12 அம்மன் கோயில்களில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படவுள்ளது.
இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு 108 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் மற்ற 11 கோயில்களில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை காணொலி காட்சி மூலம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மற்ற 11 கோயில்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்