Thiruppavai 20: பகைவருக்கு வெப்பத்தை பரிசாக கொடுப்பவரே எழுந்திரு.! கண்ணனை எழுப்பும் ஆண்டாள்
Margali 20: மார்கழி மாதம் 20வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபதாவது பாடல் மூலம் கூற வருவதை காண்போம்.
பாடல் விளக்கம்:
துன்பங்களை போக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் செல்லும் முன்பே சென்று, துன்பங்களை ஒழிக்க கூடியவரே, நேர்மையானவரே, ஆற்றல் உடையவரே, பகைவருக்கு வெப்பத்தை பரிசாக கொடுக்க கூடிய கண்ணனே! எழுந்திருப்பாயாக..
நல்ல அழகான தங்க கலசத்தை போல் உள்ள கண்ணனின் மனைவியாகிய நப்பின்னையே எழுந்திரு,
விசிறி, கண்ணாடி உள்ளிட்ட பூஜை பொருட்களையும், கண்ணனையும் அனுப்பி வைத்தால், கண்ணபிரானை வணங்கி, நாங்கள் அவரது அருளை பெறுவோம் என நப்பின்னையிடம் ஆண்டாள் எடுத்துரைப்பது போல ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார்.
திருப்பாவை இருபதாவது பாடல்:
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்
Also Read: Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...