Karthigai Deepam 2021: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - கோயிலில் பரணி தீபம் ஏற்றம்
’’திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 3:20 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது’’
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த 10 நாட்களும் காலை, மாலை என இருவேளையும் உற்சவ மூர்த்திகள் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விழாவின் 10 வது நாள் திருவிழாவான இன்று அதிகாலைபஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, பின்னர் அதிகாலை 03.20 மணிக்கு ஆலயத்தின் கருவரை முன்பு உள்ள பிரதோஷச நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையிலும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்று தத்துவத்தை விளக்கும் வகையிலும் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த பரணி தீப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா என்று சொல்லி வழிபட்டார்கள். பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை சிவாச்சாரியார் கையில் ஏந்தியவாறு திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதன் பின்னர் வைகுந்த வாயில் வழியாக மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர், முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது. பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பகுதியில் நேற்று முதல் பரவலான மழை பொழிவு இருந்து வரும் நிலையில் இன்று காலை முதல் மழை சற்று குறைந்துள்ளது. மேலும் மகாதீபத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.