கரூர் : ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை.!
கரூர் தும்பிவாடி அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது
ஆன்மீக தலங்கள் என்றாலே கரூருக்கு சிறப்பு. அதேபோல் ஆலயத்தில் முன்னோர் காலம் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலய தெய்வங்களை பராமரித்து சேதமடைந்துள்ள இடங்களை சரிசெய்து, அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நடைபெற்று வருகிறது. அந்த ஆலயத்திற்கு மீண்டும் சக்தி வழங்குவது கும்பாபிஷேகத்தின் சிறப்பு என்பார்கள். அதேபோல் கரூரில் புகழ்பெற்ற ஆலயமான அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயம் கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து 48 மண்டல அபிஷேகங்களும் நடைபெற்றது. பின்னர் 48-ஆம் நாள் 108 சங்கு அபிஷேகத்தில் மண்டலாபிஷேக நிறைவு பெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், தும்பிவாடி கிராமம், வெள்ளரிப்பட்டி பசுபதிபாளையம் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு மாதம், மாதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மனுக்கும், பரிவார தெய்வங்கள் ஆகிய விநாயகர், வள்ளி, தெய்வானையுடன், பாலமுருகன், பொன்னர், சங்கர், ஏழு கன்னிமார்கள், மகாமுனி, கருப்பணசுவாமி மற்றும் நாக தேவதை உள்ளிட்ட தெய்வங்களுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால், தயிர் இளநீர், எலுமிச்சைச்சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி மூலவர் ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்து வண்ண மாலைகளால் அலங்காரம் செய்திருந்தார். பின்னர் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் பாலமுருகன், பொன்னர், சங்கர்,ஏழு கன்னிமார் தெய்வங்கள், மகாமுனி, கருப்பணசுவாமி, நாக தேவதை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, சந்தனப் பொட்டிட்டு, வண்ண மாலைகளால் அலங்காரம் நடைபெற்றது.
ஆலயத்தில் மூலவரான ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் மற்றும் ஆலயத்தில் வீற்றிருக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்சகற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத அமாவாசை விழா ஏற்பாட்டை ஆலய 60 குடி பாட்டு பங்காளிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவ காரணமாக 60 வீட்டு பங்காளிகளுக்கும், அப்பகுதி பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்ற வைகாசி மாத அமாவாசை விழாவை ஆலயப் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தார்கள். இந்த மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் 60-க்கும் மேற்பட்ட குடி பாட்டு பங்காளிகள் இந்த இந்நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.