சனி தோஷம் போக்கும் புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை மனமுருக வழிபட்ட பக்தர்கள்!
சனிக்கிழமையில் பெருமாளை பக்தர்கள் வழிபட்டால் அவர்களுக்கு பிடித்த சனி தோஷம் நிவர்த்தியாக என்பது ஐதீகம்
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருமாள், அனந்த பத்மநாபன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், பிரசித்திபெற்ற பெருமாள் கோயில்களில், காலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதனை காண்பதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் வருகிறது. புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையில் பெருமாளின் அவதாரம் நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு சிறப்பு உள்ளது.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிருந்து விடுபட்டு, காரியத் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையல் வைத்து பெருமாளை வழிபடுகின்றனர்.
கர்ம பலன்களை அழிக்கும் சனிபகவான், கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் பிறந்தார். சனி பகவானை ஆயுள் காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக ஆனது.
ஆகையால் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமைகளும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதுபோல விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் திருகோவிலூர் உலகளந்த பெருமாள் பக்தர்களுக்கு அனந்த பத்மநாபன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சந்தான பாக்கியம், திருமண பாக்கியம்
பக்தர்கள் அனைவரும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபட்டால் சந்தான பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்கும். மேலும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் பெருமாள் கோவில்களில் துலாபாரம் வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் சனிக்கிழமையில் பெருமாளை பக்தர்கள் வழிபட்டால் அவர்களுக்கு பிடித்த சனி தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.