![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kanni Rasi Puthandu Palan: கன்னி ராசிக்காரர்களே! 2024ல் உங்கள் வாழ்க்கை எப்படி அமையப்போகுது?
Kanni Rasi Puthandu Palan: கன்னி ராசியினருக்கு 2024ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது என்பதை கீழே காணலாம்.
![Kanni Rasi Puthandu Palan: கன்னி ராசிக்காரர்களே! 2024ல் உங்கள் வாழ்க்கை எப்படி அமையப்போகுது? New Year Rasi Palan 2024 Kanni Puthandu Palan 2024 Kanni Rasi Yearly Prediction Kanni Rasi Puthandu Palan: கன்னி ராசிக்காரர்களே! 2024ல் உங்கள் வாழ்க்கை எப்படி அமையப்போகுது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/19/5731018753d8f999e7e07d4e601a9bf01700400819587102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2024 கன்னி ராசி வருட பலன்:
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,
கடந்த 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு ஏற்ற, இறக்கமான ஆண்டாக இருந்திருக்கும். வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது ? என்பதை பார்ப்பதற்கு முன்பாக பலன்களை நான் இரண்டாகப் பிரிக்கிறேன்.
அதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு வருடத்தின் கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு நன்மையை செய்யக்கூடிய மாதங்களாகவே இருந்திருக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு மீன வீட்டில் அதாவது உங்கள் ராசியின் 7ம் வீட்டில் பிரவேசிப்பதால் நிச்சயமாக திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வந்திருக்கும். வீடு, மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். புது தொழில் வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக உண்டாகி இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற நல்ல பலன்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.
வருடத்தின் முதல் 3 மாதங்கள்:
2024 ஆம் ஆண்டு வருடத்தின் முதல் 3 மாதங்கள் உங்களுக்கு சற்று நிதானமான பலன்களையே வாரி வழங்கும். காரணம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் அமர்ந்து நல்ல யோகத்தை செய்யக்கூடியவராக இருந்தாலும், உங்களுக்கு 4ம் வீட்டு அதிபதியும் 7ம் வீட்டு அதிபதியுமான குரு பகவான் லக்னத்திற்கு 8ல் மறைவதால் நிச்சயமாக வம்பு வழக்குகள், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஜாமீன் கையெழுத்து மூலமாக பிரச்சனைகள், அடுத்தவர் மூலமாக சிக்கல், மறைமுக எதிர்ப்பு போன்ற கெடுபலன்களையே ஓரளவுக்கு சந்திக்க கூடும். கவலை வேண்டாம் உங்கள் லக்னத்திலேயே கேது இருப்பதால் அவை அனைத்தையும் கேது பகவான் தடுத்து, உங்கள் மீது விழாதபடி பார்த்துக் கொள்வார். இது போன்ற கெடு பலன்கள் குறைய வேண்டுமானால் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
கெடு பலன்கள் குறைய ஆஞ்சநேயர் வழிபாடு:
கன்னி ராசியின் லக்னத்திலேயே “கேது பகவான்” அமர்ந்திருப்பதால் நிச்சயமாக ஒரு வேலையை நீங்கள் செய்யப் போனால், அது சற்று தாமதப்படுவதையோ அல்லது நீங்கள் நிதானமாக செய்வதால் மற்றவர்களுக்கு அது தவறாக தோன்றகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது . எனவே ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் நான்கரை முதல் 6:00 மணி வரை ஆஞ்சநேயர் கோயில் சென்று நெய் தீபமிட்டு அவரை வழிபட்டு வந்தால் கெடு பலன்கள் அப்படியே குறைந்து நற்பலன்கள் மேலோங்கும்.
இந்த பலன்கள் வருடத்தின் முதல் 3 மாதங்கள் மட்டுமே நடைபெறும் என்பதால், ஆஞ்சநேயர் வழிபாடு முதல் 3 மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தவறாமல் செய்து வந்தால், வருகின்ற கெடு பலன்களை ஆஞ்சநேயரே தடுத்து நிறுத்தி உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்குவார்.
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை:
2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு ஜாக்பாட் மாதம் என்றே சொல்லலாம். வருடத்தின் முதல் 3 மாதங்கள் ஏற்ற இறக்கமான சூழ்நிலையாக இருந்தாலும், மே மாதம் 1-ம் தேதிக்கு பிறகு குருபகவான் ரிஷப ராசியில் பிரவேசிப்பதால், அவர் உங்கள் கன்னி ராசியை பார்வையிடுகிறார், எனவே கன்னி ராசியில் இருக்கும் கேது உங்களுக்கு கொடுக்கக்கூடிய கெடுபலன்கள் நிச்சயமாக குறையும். அதேபோல பாக்கியஸ்தானத்தில் குரு வருவதால் திருமணம் கைகூடிவரும். வழக்குகள் முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் சிறப்பாக கிடைக்கும்.
நீண்ட நாட்களாக மழலைச் செல்வம் தங்களுக்கு இல்லையே என்று ஏக்கத்தில் இருக்கும் கன்னி ராசியினர்களே… குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ம் அதிபதியும் 7ம் அதிபதியும் ஆக வந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் மழலைச் செல்வத்தால், உங்கள் மனம் மகிழ்ச்சி அடையப்போகிறது. திருமணத்திற்கென்று வரன் பார்க்கிறவர்கள் சற்று கவனமாகவே பார்ப்பது நல்லது காரணம் கன்னி ராசிக்கு, 7ம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால், முதல் 3 மாதங்களில் திருமண காரியங்களோ அல்லது சுப காரியங்களை தள்ளி போடுவது நல்லது.
எந்த சுபகாரிய நிகழ்வாக இருந்தாலும் குறிப்பாக நிச்சயதார்த்தம், திருமணம் சம்பந்தப்பட்ட எந்த காரியங்களாக இருந்தாலும், முதல் 3 மாதங்களில் வைக்காமல் மே மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு கன்னி ராசியினருக்கு திருமண பேச்சுவார்த்தையோ அல்லது சுப காரியங்களையோ வைப்பது மிகப் பெரிய ஏற்றத்தையும் நிலையான முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
முதல் 3 மாதத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது:
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் இந்த 3 மாதங்களில் உங்களுடைய ராசியில் கேது அமர்ந்து, 7ம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார், எனவே நிச்சயமாக சுப காரியமான திருமண பேச்சு வார்த்தையோ, திருமண நிச்சயதார்த்தமோ அல்லது திருமணத்தையோ வைக்காமல் கன்னி ராசியினர் பார்த்துக் கொள்வது மிக, மிக சிறப்பு. இதற்கு மாற்று வழியே இல்லையா என்று யோசிக்கும் உங்களுக்கு பரிகாரம் என்னவென்றால், ஒருவேளை கன்னி ராசி மணமகனுக்கு, மணமகள் அயல்நாட்டிலிருந்து, அயல் தேசத்திலிருந்து வருகிறவராக இருந்தால் நிச்சயமாக அந்த திருமணம் நல்லபடியாக முடியும்.
அல்லது தம்பதியினர் திருமணம் செய்த பின்பாக வெளிநாடுகளுக்கு சென்று வந்தால் அல்லது அங்கேயே வாழ்க்கையை நடத்தப் போகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அந்த திருமணம் நல்லபடியாக முடியும். கன்னி ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்து 7ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவதால் முதல் மூன்று மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக வம்பு வழக்கு, போலீஸ் ஸ்டேஷன், போர்ட் கேஸ் இவை எல்லாவற்றிலும் இருந்து விலகி இருப்பது நல்லது.
மார்ச் மாதத்திற்கு பிறகு நீங்கள் தான் ராஜா :
நீங்கள் தொழில் செய்கிறவராக இருந்தாலும் கூட உங்களுக்கு, லக்னத்தில் கேது அமர்ந்து 6ம் வீட்டில் சனி, 8ம் வீட்டில் குரு போன்ற கிரகங்கள் உங்கள் ராசிக்கு மறைவதால் முதல் 3 மாதத்தை தவிர்த்து எஞ்சி இருக்கும் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு நடக்க வேண்டிய சுபகாரியங்கள், வரவேண்டிய பணம், தொழிலில் முன்னேற்றம், அதிகப்படியான லாபம், பிள்ளைகளின் முன்னேற்றம், வருங்காலம் குறித்தான நல்ல திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற சுகமான விஷயங்கள் நடக்கும்.
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
அதிர்ஷ்டமான எண் : 5, 6
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)