கரூர்: ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?
கரூரில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் குறித்து சிறப்பு தொகுப்புதான் இது
கரூர் மாவட்டம், கோடங்கிபட்டி கிராமம், சின்னமாநாயக்கம்பட்டி அருகே உள்ள பகுதியில் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட சிவாலயம் இது. ஆண்டுகள் மாற, மாற அதன் பராமரிப்பு பணிகள் செய்யாத நிலையில் பல ஆண்டுகள் முள் படிந்த இடமாகவே காட்சியளித்தது.
அதனை சிறுக, சிறுக சரிசெய்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பெருமக்கள் சுவாமியின் பெயர் சொல்லும் அளவிற்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் சுவாமி ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் புதுப்பிக்கப்பட்டு ஆலயத்தில் நால்வர்கள், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும்,
மூலவர் வீரபாண்டி ஈஸ்வரர் அதற்கு எதிரே நந்தி பகவானும், அதேபோல் ஸ்ரீ வைராக்கிய நாயகி ஆலயம் அருகே கண்ணுக்கு மருந்தாக காட்சியளிக்கின்றனர். ஆலயத்தில் உள்ள தோற்றம் மற்றும் பரிவார தெய்வங்களின் இருப்பிடம் காணலாம். அருள்மிகு ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது.
ஆலய நுழைவாயில் கிழக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. பெரும்பாலும் கிழக்கு பகுதியில் உள்ள நுழைவாயில் வழியாகவே , ஆன்மீகப் பெருமக்கள் ஆலயத்தில் தரிசிக்க வருவது வழக்கம். திருவிழாக்காலங்களில் இரண்டு நுழைவாயிலும் திறக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஆலயம் நுழைவாயில் வந்தவுடன் பக்தர்கள் தங்களது கை, கால்களை கழுவ தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து ஆலயத்தின் தென்புறம் நால்வர் உற்சவங்களும் , அதைத்தொடர்ந்து, மகா கணபதி கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
பின்னர் ஆலயம் வலம் வரும்போது அதன் அருகே ஆலயத்தின் வடப்புறத்தில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அதைத்தொடர்ந்து, ஆலய மண்டபம் அருகே சண்டிகேஸ்வரர் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். அதேபோல் ஆலயம் வலம்வரும் இடத்தில் கிழக்குப் பகுதியில் பைரவர் காட்சி தருகிறார்.
அதைத்தொடர்ந்து, சற்று கிழக்கே 9 நவக்கிரகங்கள் ஆன ராகு பகவான், கேது பகவான் ,சூரியன் பகவான், சந்திரன் பகவான் ,சனி பகவான், குரு பகவான், செவ்வாய் பகவான், சுக்ரன் பகவான், புதன் பகவான் உள்ளிட்ட நவக்கிரகங்களை தொடர்ந்து, கிழக்கு நுழைவாயில் அருகே மேற்கு நோக்கி சந்திர பகவானும், சூரிய பகவானும் அருள்பாலிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மிக உயரமான கொடிமரம் பிரம்மாண்ட காட்சி அளிக்கிறது. அதனருகே, மூலவர் வீரபாண்டி ஈஸ்வரரை நோக்கி பிரம்மாண்ட நந்தி பகவான் காட்சி அளிக்கிறார். மாதம்தோறும் பிரதோஷங்களுக்கு இந்த நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து, வடக்கில் வைராக்கிய அம்மனை நோக்கி மற்றொரு நந்தி பகவானும் காட்சி அளிக்கிறார். அதைத் தொடர்ந்து , ஆலய மண்டபம் பிரம்மாண்டமான முறையில் எழுப்பப்பட்டு சிறப்பு காட்சி அளிக்கிறது. அதைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் கிழக்கு நோக்கி சிவலிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஆலய மண்டபத்தில் வடக்கிலிருந்து ,தெற்கு நோக்கி ஸ்ரீ வைராக்கிய அம்மன் கம்பீரத் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஆலயத்தில் மூலவர் உட்பட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் நாள்தோறும் நித்திரைப் பூஜை நடைபெற்று வருகிறது.
அதைத் தவிர மாதம் தோறும் பைரவருக்கு, நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரியில் நான்கு கால இரவு பூஜை மிகப்பிரம்மாண்டமான முறையில் அன்னதானத்துடன் நடைபெற்று வருகிறது.
ஆலயத்தின் சிறப்பு பல்வேறு இருக்கும் நிலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயத்தைப் புதுப்பித்து தற்போது உள்ள ஆலய நிர்வாகிகள் அதன் பராமரிப்பு பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.
குறிப்பு- கரூர், கோடங்கிபட்டி, சின்னமாநாயக்கம்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்ல விரும்புவோர். கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 நிமிடத்திலும், நான்கு சக்கர வாகனத்தில் செல்ல விரும்புவோர் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிடத்திலும் செல்லலாம். தற்போது வழித்தடத்தில் மினி பேருந்து மட்டுமே இயங்கி வருகிறது.
.