திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - கரும்புத் தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளன்று கரும்புத் தொட்டில் கட்டி மாடவீதி வலம் வந்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், பௌர்ணமி கிரிவலமும் மகா தீபம் உலக பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் என சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில் தோராயமாக 20 முதல் 30 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் பிரம்மாண்டமான தீபத் திருவிழா கோலாகலமில்லாமல் ஆகமவிதிகளின்படி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகின்றது. கோவில் வளாகத்திலேயே திருவிழா நடந்தாலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு தங்கள் நேர்த்தி கடனைச் செய்ய வேண்டு, என கரும்பு தொட்டிலோடு மாடவீதியை வலம் வருகிறார்கள்.
ஹோய்சாள வம்சத்தினர் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவின் ஒரு பகுதியை இணைத்து சில நூற்றாண்டுகள் ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் தலைநகரம் ஹௌபேடாக இருந்த நிலையில் இரண்டாவது தலைநகரமாக திருவண்ணாமலை இருந்தது. சோழர்களோடு திருமண உறவு வைத்து கொண்டிருந்த ஹோய்சாள வம்சத்தினர். கி.பி. 1291 முதல் 1343 வரை ஆட்சி செய்தவர் வீர வல்லாள மகாராஜா. அவருக்கு வாரிசு இல்லை என்பதால் தனக்கொரு வாரிசு வேண்டும் என அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்தார். அதன்படி அவருக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கிறது. அண்ணாமலையாரே தனக்கு மகனாகப் பிறந்தார் பின் வளர்ந்தார் என்கிறது தலபுராணம். இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலின் தலபுராணத்தை படிக்கும், கேட்கும் பக்தர்கள், குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வேண்டும் என அண்ணாமலையாரை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
அப்படி பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்தவுடன் அண்ணாமலையாருக்கு நேர்த்திகடன் செலுத்தும் விதமாக, கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 ஆம் நாள் அன்று, பன்னீர் கரும்பு வாங்கிவந்து அதில் புடவையை கொண்டு தொட்டில் கட்டி தங்களது குழந்தையை அதில் உட்கார வைத்து அண்ணாமலையார் கோயில் அமைந்த மாடவீதியை வலம் வந்து தங்களது நேர்த்தி கடனைச் செலுத்துகின்றனர். பன்னீர் கரும்பை பக்தர்கள் பயன்படுத்த காரணம், அது இனிப்பானது என்பதால் கடவுளுக்கு இனிப்பாக நன்றியை செலுத்த வேண்டுமென பக்தர்கள் கரும்பை தேர்வு செய்து காலம் காலமாக அதன்படி கரும்பில் தொட்டில் கட்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாடவீதியை சுற்றி வருகின்றனர். அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டபடி கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மாடவீதியில் வலம் வருவது பக்தி பக்தி பரவசத்துடன் சுற்றி வருகின்றனர்.