குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம்! விவசாயிகளுக்கு மானியம், விதை, மண் வளத்தை பெருக்கும் திட்டம்!
விழுப்புரம்: நெல் சாகுபடியை ஊக்குவிக்க நெற்பயிர் இயந்திர நடவிற்கு பின்னேற்பு மானியமாக ரூ.4000/-ஏக்கர். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.

குறுவை சிறப்புத்தொகுப்பு திட்டம்
குறுவை சாகுபடியை ஊக்குவிக்க, அ.தி.மு.க., ஆட்சியில், குறுவை தொகுப்பு திட்டத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2016ல் அறிமுகம் செய்தார். அன்று முதல் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் அவர்களால் 2025-26ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் குறுவை சிறப்புத்தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட அறிவிக்கை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவுதானிய உற்பத்தியினை உயர்த்திட சிறப்பு தொகுப்பு திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
வேளாண்மைத்துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இயந்திர நடவு பின்னேற்பு மானியம். தரமான சான்றுபெற்ற விதைகள், நுண்ணூட்ட உரக்கலவை மற்றும் திரவ உயிர் உரங்கள் விநியோகம் ஆகிய திட்ட இனங்களை செயல்படுத்திட ரூ.794.288 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க நெற்பயிர் இயந்திர நடவிற்கு பின்னேற்பு மானியமாக ரூ.4000/-ஏக்கர். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் நெற்பயிரின் உற்பத்தி அதிகரித்து சாகுபடி செலவு குறைந்து விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக்கலவை பயன்படுத்துவதால் மண்வளம் சீர்படுத்தப்பட்டு பயிரின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். எனவே, நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50% மானிய விலையில் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வீதத்தில் ரூ.147,60 ஏக்கர் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 25 ஏக்கர் வரையிலும், திரவ உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதத்தில் 50% மானியத்தில் ரூ.60 ஏக்கர் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 25 ஏக்கர் வரையிலும் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தரமான சான்றுபெற்ற நெல் விதைகள் ரூ.20 கிலோ அல்லது 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்காக வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறுகிய மற்றும் மத்திய கால சான்றுபெற்ற நெல் இரகங்கள் 162 மெடன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தில் பயனடையலாம்.
பெண் விவசாயிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இத்திட்டத்தினைப்பற்றி விவரம் பெற தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு வேளாண்மை இணை இயக்குநர் ஈஸ்வர் தெரிவித்தார்.





















