கனகாம்பரம் பூ விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டும் விழுப்புரம் விவசாயிகள்
குளிர் காலத்தில் வாடியும் வதங்கியும் காணப்படுகின்ற வெப்பச் சூழ்நிலைக்கு ஏற்றத் தாவரமாகும். இதை தொட்டிகளில் வளர்க்கும் பழக்கமும் காணப்படுகிறது.
விழுப்புரம் அருகே ராதாபுரம் கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் கனகாம்பரம் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும் எக்காலமும் குறிப்பிட்டு வகையராமல் என்றும் பூக்கும் தாவரமாகும். இதை பெண்டுகள் தலையிற் சூடிக்கொள்ளவும், மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுத்தியும், பிற அலங்காரப் பொருட்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
குளிர் காலத்தில் வாடியும் வதங்கியும் காணப்படுகின்ற வெப்பச் சூழ்நிலைக்கு ஏற்றத் தாவரமாகும். இதை தொட்டிகளில் வளர்க்கும் பழக்கமும் காணப்படுகிறது. இதன் மலர் 3-4 சமச்சீரற்ற இதழ்களைக் கொண்டுக் காணப்படுகிறது. இவைப் புதருப்போல் மண்டி கொத்துக்கொத்தாய் பூத்துக் குலுங்கும் தன்மையது. இவற்றின் விதைகள் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறி செடியிலிருந்துக் கீழே விழுகிறது. இது இவ்வாறு பல இடங்களுக்கும் பரவுகிறது.
மழைக்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் பூக்களை கொடுக்கும் இந்த செடி, விவசாயிகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஏக்கர் கணக்கில் பிற மலர்களை நட்டாலும் குறைந்தது செண்ட் கணக்கிலாவது கனகாம்பரம் செடியை நடுவதை விவசாயிகள் பழக்கமாக கொண்டுள்ளனர். விழுப்புரம் சுற்றியுள்ள ராதாபுரம், மதுரபாக்கம், திருக்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம் போன்ற மலர்களை பருவ காலங்கள் மட்டுமல்லாமல் அனைத்து பருவங்களிலும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற மலர்களில் சாகுபடி இல்லாத நேரத்தில் கூட, இந்த செடியில் மலர்களை சாகுபடி செய்து அதன் மூலம் வீட்டு செலவுகளையாவது சரி கட்டலாம் என்பது விவசாயிகளின் கணக்காகும். கனகாம்பரம் வளர்ப்பதற்கு ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை ஏற்றதாக இருக்கும். நல்ல வடிகால் வசதி உள்ள மண் மற்றும் செம்மண் கனகாம்பரம் வளர்ப்புக்கு ஏற்றது. கனகாம்பரம் செடி வளர்ப்பதற்கு நிலத்தை நன்கு உழுது தேவையான அளவு பாத்தி அமைத்து, 5 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைகளை ஊன்றுதல் அவசியம்.
தற்போது ராதாபுரம் போன்ற பல பகுதிகளில் கனகாம்பரம் மலர் நல்ல விளைச்சல் தந்துள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் கிலோ கணக்கில் திண்டிவனம், பாண்டிச்சேரி போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஒரு கிலோ தற்போது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது எனவும் விசேஷ காலங்களில் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போகும் என விவசாயி தெரிவிக்கின்றார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 கிலோ முதல் 5 கிலோ வரை பூக்களை பறித்து சந்தைகளுக்கு அனுப்புகிறோம். தற்போது வருகிற நாட்களில் பண்டிகைகள் இருப்பதால் கனகாம்பரம் மலர்கள் நல்ல விலை போகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்று விவசாயிகள் கூறுகிறார்.