திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் - கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு
மழையால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை வேளாண்மை துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நடத்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்துப் போனதன் காரணத்தினாலும் விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டதன் காரணத்தினால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்கூட்டியே சாகுபடி பணிகளை தொடங்கியதால் தற்பொழுது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை வேளாண்மை துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நடத்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி பரவலாக கன மழை பெய்தது. இந்த மழையில் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழை நீரை வடிய வைக்க விவசாயிகள் தற்போது பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மழை நீரால் சாய்ந்த நெற்பயிர்கள் முளைக்கவும் தொடங்கி விட்டன. மே 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், மிகுந்த நம்பிக்கையுடன் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அறுவடை தருணத்தை எட்டிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை விவசாயிகளுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சம்பா சாகுபடி விவசாய நிலங்களில் நேரடி நெல் தெளிப்பு தெளித்த வயல்களிலும் தண்ணீர் தேங்கி, தெளித்த விதைகளையும் சேதப்படுத்தி உள்ளது. இந்த சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் , தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த குறுவை மற்றும் சம்பா சாகுபடி வயல்கள் குறித்து வேளாண்மை துறையும் வருவாய் துறையும் இணைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கணக்கெடுப்பு பணி நடத்தி முடித்தவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.