தேனி: நடப்பாண்டு நெல் இதுவரை 688 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 104 ஹெக்டேரிலும் சாகுபடி
தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 688 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 104 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 234 ஹெக்டேரிலும், பருத்தி 148 ஹெக்டேரிலும்,, எண்ணெய்வித்து பயிர்கள் 148 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 63.35 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 42 மெ.டன்னும் (NLR, CO 55), சிறுதானியங்கள் 5.3 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் 9.5 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 4.9 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 2,149 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 786 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 485 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,088 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீதம் மானியத்தில் ஏக்கருக்கு 20 கிலோ விதை விநியோகம் செய்யப்படவுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 1 ஏக்கருக்கு விதைகள் பெற்று பயனடையலாம். தேனி மாவட்டத்திற்கு 3500 ஏக்கர் பொருள் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் திரவ உயிர் உர பயன்பாட்டினை ஊக்குவிக்க 50 சத மானிய விலையில் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை பயனடையலாம். வேளாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த சிறப்பு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் துரித உணவுகளின் நாட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக சிறுதானிய உணவினை எடுத்துக்கொள்வதன் அவசியமும், அதனை ஊக்குவித்து உற்பத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு, சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.
முன்னதாக, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பண்ணையில், விவசாயிகளை அழைத்து சென்று தென்னை மரத்தில் வெள்ளைப் பூச்சி, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு தாக்குதல் மற்றும் மா-வில் நோய்த்தடுப்பு முறையினை கண்டறிதல், அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கமும், வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு குறைந்த விலையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்தும், வாகனத்துடன் இயங்ககூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.