பயிர் இன்சூரன்ஸ் தொகை, பிஎம் கிஷான் திட்ட பணம் கிடைக்க நடவடிக்கை எடுங்கள் - விவசாயிகள் கோரிக்கை
பயிர் இன்சூரன்ஸ் மற்றும் பி.எம்.கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்: பயிர் இன்சூரன்ஸ் மற்றும் பி.எம்.கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர வார வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது;
ஜீவகுமார்: விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டு பயிர் இன்சூரன்ஸ் பெற வேண்டும் என்று எப்போதும் நினைப்பது இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் இன்சூரன்ஸ்க்கு பணம் கட்டியும் நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த முறையும் அவ்வாறு இல்லாமல் பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது திறக்கப்படும். அரசு விதிக்கும் கெடுபிடி போலவே தற்போது தனியாரும் கெடுபிடி செய்கின்றனர். தூர்வாரும் பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். பிஎம்கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: காவிரி நீரை பெற்று ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணை திறந்தால் தான் ஒருபோக சம்பா சாகுபடி மேற்கொள்ள இயலும். தண்ணீர் இன்றி தரிசாக கிடைக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 15,000 வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.4000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இயந்திர நடவு, வரிசை நடவு செய்த அனைவருக்கும் நிபந்தனை இன்றி ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
கோவிந்தராஜ்: மூன்று ஆண்டுகள் பயிர் காப்பீட்டு செலுத்தியும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த ஊக்க தொகையை தீபாவளிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மின் மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேட்டூர் அணை திறக்க வேண்டும்
பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல்: மேட்டூருக்கு தினமும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடி செய்ய துவங்கியுள்ள நிலையில் நாற்று விட்டு நடவு செய்துள்ளனர். எனவே மேட்டூர் அணையில் இருந்து ஜூலை இறுதி வாரத்திலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ கடைமடை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
வெண்ணாற்றில் தூர்வார வேண்டும்
ரவிச்சந்திரன் : இந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பம்ப்செட் வசதி உள்ளவர்கள் மட்டுமே குறுவை சாகுபடி செய்துள்ளனர். எனவே தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்று டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெண்ணாற்றில் புதர்போல் மண்டி உள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும். மின் கட்டண உயர்வாள் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையகரம் ராஜேஷ் : அம்மையகரத்தில் வயலுக்கு குருணை மருந்து தெளிக்கும் போது அதனால் பாதிக்கப்பட்டு இறந்த விவசாயி ஜெயராஜ் (37) குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த ஜெயராஜிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களது கல்விக்கு உதவி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டிதம்பட்டு கோவிந்தராஜ்: கண்டிதம்பட்டில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் இந்த சாலை வழியாகத்தான் விவசாயிகள் விளைப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள குளங்களையும் தூர்வார வேண்டும்.
ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
அபிமன்னன் :செங்கிப்பட்டி பகுதியில் 5 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் மானாவரி சாகுபடி மட்டுமே செய்யப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இங்குள்ள ஏரிகளை முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் தண்ணீர் வரும் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வரும் வாய்க்கால்களை தூர்வாரி தர வேண்டும். ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுவாக கூட்டுப் பாசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.