ஆலக்குடி பகுதியில் சம்பா சாகுபடி பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணிகள் மும்முரம்
ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பனி தாக்கமும் அதிகம் இருப்பதால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் இப்பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த தொடர் மழையில் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விவசாயிகள் இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பல நாட்கள் கனமழை பெய்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. பின்னர் மழை சற்று ஓய்ந்த நிலையில் வயல்களில் தேங்கியிருந்த நீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டிய நிலையில் மீண்டும் மழை பெய்தது. பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வயல்களில் நீர் தேங்கியது.
இதனால் சாகுபடி பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. இந்த நிலையில் மழை முழுவதும் ஓய்ந்த பின்னர் விவசாயிகள் பயிர்களை காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கினர். தற்போது மழை இல்லாத நிலையில் வல்லம் அருகே உள்ள ஆலங்குடி, பழைய கல்வி ராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். வயல்களில் பயிர்களுக்கு இடையில் வளர்ந்துள்ள களைகளைப் பறித்தல், இளம் சம்பா பயிர்களுக்கு உரம் தெளித்தல், பயிர்களை பூச்சி தாக்காதவாறு பூச்சி மருந்து அடித்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 3.20 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது வரை சுமார் 3.18 லட்சம் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்த வயல்களில் களை அதிகரித்துள்ளது. மேலும் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பனி தாக்கமும் அதிகம் இருப்பதால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் இப்பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல்தான் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. ராமநாதபுரம் ஊராட்சி, ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் நடந்துள்ளது.
தற்போது பெய்த மழையில் எங்கள் பகுதியில் பயிர்கள் சேதம் அடைந்திருந்தது. அதனை காப்பாற்றும் வகையில் உரங்கள், மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.