அறுவடைக்கு தயாரான வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்; வாளி மூலம் வெளியேற்றும் சிவகங்கை விவசாயிகள்
மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த மடைகளை சீர் செய்யாமல் விவசாயிகளின் குறைகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. இதனால் பெருமளவு சேதமடைந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது. டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது.
இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது பல்வேறு இடங்கள் ஓரளவு மீண்டு வருகிறது. இதே போல் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் மழை நீர் சூழ்ந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த வயலுக்குள் புகுந்த கண்மாய் நீரை வாளி மூலம் தண்ணீரை வெளியேற்றும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் எட்டுச் சேரி என்னும் கண்மாய் மூலம் சுமார் 300 ஏக்கருக்கு மேல் பாசான வசதி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கண்மாய்க்கு 4 மடைகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே 2 மடைகள் சேதமடைந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். உடைந்த மடைகளை சீர் செய்ய வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் எட்டு சேரி கண்மாய் முழுவதும் நிறைந்து உடைந்த மடைவெளியாக தண்ணீர் வெளியேறி வருகின்றது.
அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உடைந்த மடையை சீர் செய்யாததால் அப்பகுதி விவசாயிகளே கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் மடையை அடைத்துள்ளனர். தற்போது அறுவடை செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மடையில் உடைப்பு ஏற்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்வெளி பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் நெற் கதிர்கள் முழுவதுமாக சாய்ந்து அழுகிய நிலையில் உள்ளது. அந்த நெற் கதிர்களை காப்பாற்ற வயல் வெளியில் உள்ள தண்ணீரை ஊற்று வாய்க்கால் போட்டு இரவு பகலாக வாளி மூலம் தண்ணீரை இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உடைந்திருக்கும் மடைகளை விரைந்து பொதுப்பணித்துறையினர் சீர் செய்ய வேண்டும் எனவும் அப்படி சீர் செய்யாவிட்டால் அப்பகுதியில் உள்ள நெற் கதிர்கள் அனைத்தும் வீணாகி அழுகிவிடும் விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த மடைகளை சீர் செய்யாமல் விவசாயிகளின் குறைகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள மடைகளை விரைந்து சீரமைத்து விவசாயிகளை பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.