RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
இந்திய சுற்றுப் பயணம் வந்த உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசளித்துள்ளார். அதன் சிறப்பு என்ன தெரியுமா.?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் இந்திய பயணத்தில், இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி நடத்தும் வன்தாரா வனவிலங்கு மீட்பு மையத்துக்கு சென்றது பெரும் பேசுபொருளானது. அதற்கு, ஆனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கிய அரிய கைக்கடிகாரமும் ஒரு காரணமாக உள்ளது. அந்த கடிகாரத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்.? பார்க்கலாம்.
ரூ.10 கோடி கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்த ஆனந்த் அம்பானி
தனது இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக, ஆனந்த் அம்பானி நடத்திவரும் வன்தாரா வனவிலங்கு மீட்பு மையத்திற்கு சென்ற மெஸ்ஸிக்கு, ஆனந்த் அம்பானி அரிய ரிச்சர்ட் மில்லே கடிகாரத்தை பரிசாக அளித்தார். முன்னதாக, வன்தாரா மையத்துக்கு மெஸ்ஸி வந்தபோது, அவர் கையில் இந்த கடிகாரம் இல்லை. ஆனால், அவர் வெளியே வரும்போது பதிவான புகைப்படத்தில், அவர் கையில் அந்த கடிகாரத்தை கட்டியிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் சுமார் 10.91 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகையிலானது என்பதால், மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
அது என்ன கைக்கடிகாரம்.? அதில் என்ன ஸ்பெஷல்.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த கைக்கடிகாரத்தின் பெயர், ரிச்சர்ட் மில்லே(Richard Mille) RM 003-V2 GMT டூர்பில்லான் 'ஆசிய எடிஷன்'. இது உலகில் வெறும் 12 வாட்ச்சுகள் மட்டுமே உள்ள அரிய மாடல். இதன் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டாலர்கள், அதாவது 9.92 கோடி முதல் 10.91 கோடி ரூபாய் வரை இருக்கும் கணக்கிடப்படுகிறது.
இந்த கைக்கடிகாரம் கார்பன் TPT என்ற பொருளால் செய்யப்பட்டது. இதனால், கடிகாரம் இலகுவாகவும், அதே சமயம் மிகவும் வலிமையாகவும் இருக்கும்.
இது டூர்பில்லான்(Tourbillon) இயக்கம் கொண்டது. அதாவது, கைமுறையாக சுழற்றப்படும் (manual-winding) டூர்பில்லன் இயக்கம் துல்லியத்தைக் காட்டுகிறது.
மேலும், இது இரண்டாவது நேர மண்டலத்தை (GMT) கொண்டுள்ளது. அதோடு, இது ஸ்கெலிட்டன் (skeleton) வடிவமைப்பை கொண்டது. அதாவது, கடிகாரத்தின் உள்ளே உள்ள பாகங்கள் தெரியும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும்.
மொத்தத்தில், ரிச்சர்ட் மில்லே RM 003-V2 GMT கைக்கடிகாரம் என்பது, தொழில்நுட்பம், கலைத்திறன், ஆடம்பரம் ஆகியவற்றின் கலவையாக உள்ளது. இதனால் தான், வாட்ச் பிரியரான ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு இந்த கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார். மேலும், ஆனந்த் அம்பானி அதே போன்ற ஒரு கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். Richard Mille RM 056 Sapphire Tourbillon மாடலான அதன் மதிப்பு சுமார் 45.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.





















