இயற்கை விவசாயத்தில் அதிக லாபம்... ஆனால் இதெல்லாம் ரொம்ப முக்கியம்! ஸ்பெஷல் ஐடியா உங்களுக்காக!
நல்ல இடுப்பொருட்களை கொடுத்தால் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்....
இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்கிறார் விழுப்புரம் மாவட்ட இயற்கை விவசாயி ஏழுமலை.
பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை வயலில் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக மண்வளம், மற்றும் மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைகளிலிருந்து இருந்து விடுபடுவதற்கு இயற்கை முறையில் விவசாயம் செய்வது சிறந்த வழிமுறையாக உள்ளது. அதிலும் உலக அளவில் நெற்பயிரை உணவுப் பயிராகப் பயன்படுத்துவதால், இயற்கை முறையில், பாரம்பரிய நெல் சாகுபடி அவசியமாகிறது. இயற்கை நெல் சாகுபடி என்பது, செயற்கை உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கை சார்ந்த எருக்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தி சாகுபடி செய்வதாகும்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி ஏழுமலை (வயது 42). இவர் பத்து வருடங்களாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். தற்போது தன்னுடைய 2 ஏக்கர் வயலில் பாரம்பரிய நெல் ரகங்களான பூங்கார், சிவன் சம்பா, கருங்குருவை, நெல்லையப்பர் போன்ற பாரம்பரியங்களை பயிரிட்டுள்ளார். இயற்கை விவசாயதில், நெல் சாகுபடி பொருத்தவரை நடவு நட்ட பிறகு, 15 நாளுக்கு ஒருமுறை இடுப்பொருட்கள் தர வேண்டும், 40 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலுடன் பூச்சி விரட்டி கலந்து அடிக்க வேண்டும், 60 நாளில் இன்னொரு பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம். 70 வது நாளில் மோர் கரைசலை நெல்லுக்கு பயன்படுத்தலாம். அதற்கு முன்னர் வயலை நவதானியங்கள் போட்டு நன்றாக ஏர் உழுத பிறகு நடவு நட்டால் பயிர் நன்றாக வளரும். நெல்லுக்கு ஜீவாமிர்தம், வேப்ப எண்ணெய் கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, கற்பூர கரிசல் போன்ற இயற்கை ஊட்டிகளை நாமலே வயலில் தயார் செய்து, பயன்படுத்தலாம்.
பாரம்பரிய நெல் ரகங்களில் குறைந்த அளவில் மகசூல் ஈட்டினாலும் நல்ல லாபத்தை பார்க்க முடியும். குறைந்தபட்சம் ஒரு ஏக்க நிலப்பரப்பில் இருந்து 25 மூட்டைகள் வரை நெல் அறுவடை செய்யலாம். பூங்கார் ஒரு கிலோ அரிசி 110 ரூபாய்க்கும், கருங்குறுவை ஒரு கிலோ 110 ரூபாய்க்கும்,சிவன் சம்பா ஒரு கிலோ 130 ரூபாய்க்கும்,நெல்லையப்பர் ஒரு கிலோ 90 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகிறது. குறைந்தபட்சம் ஒரு மூட்டையில் (25 கிலோ ) 3,000 ரூபாய்க்கு விலை போகிறது. கண்டிப்பாக ஒவ்வொரு விவசாயியும் 110 நாட்களில் இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகத்திலிருந்து,குறைந்தப்பட்சம் 25,000 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும் என்கிறார் இயற்கை விவசாயி ஏழுமலை.
ஒரே ஒரு செயல்தான் இயற்கை விவசாயம் பொருத்தவரை நல்ல பராமரிப்பும், சரியான இடுப்பொருட்களும் இருந்தால் , கண்டிப்பாக நல்ல மகசூல் ஈட்டி, லாபம் பார்க்க முடியும், அதுபோல ஒவ்வொரு விவசாயம் குறைந்தபட்சம் சென்ட் கணக்கு ஏதாவது இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இயற்கை விவசாயி ஏழுமலை.
அதுபோல, இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு வெளிநாடு, உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பெருநகரங்களில் இயற்கை வேளாண் விளை பொருள்களுக்காக தனியாகக் கடைகள் தொடங்கப்படுவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராகி வருகின்றனர். எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால், விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்கிற விவசாயி ஏழுமலை.