மயிலாடுதுறையில் மண்டியிட்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயி - எதற்காக தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் மண்டியிட்டபடி கூட்ட அரங்கிற்கு வந்து நூதன முறையில் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுக்கா பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி மனுக்களை அளித்தனர்.
மண்டியிட்டு மனு அளித்த விவசாயி
அப்போது மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் இருந்து கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு கையில் மனுவுடன் மண்டியிட்டு வந்து, பழங்காவேரி ஆற்றை தூய்மைப்படுத்த கோரி நூதன முறையில் மனு அளித்தார். மேலும் தான் தொடர்ந்து 8 ஆண்டுகளாக இதுகுறித்து மனு அளித்து வருவதாகவும், தான் அளித்த மனுவிற்கு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காததால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க கோரியதால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேதனை தெரிவித்த விவசாயி
மயிலாடுதுறை நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள் மிகவும் மோசமான பாதாள சாக்கடை கழிவுநீரை திறந்துவிடப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி எட்டு ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதி வழங்கிய பழங்காவிரி தற்போது குப்பை மற்றும் கழிவுநீரால் சூழப்பட்டு இருப்பதால் காவேரி நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் மண்டியிட்டு மனு அளித்ததாக அவர் வேதனை பட தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பழங்காவேரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குப்பைகளை போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினர். இது தொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு மாபெரும் தூய்மை பணி பழங்காவிரியில் மேற்கொள்ளப்பட்டு காவிரி தண்ணீர் செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயி போராட்டத்தை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தார். மேலும் விவசாயி ஒருவர் மண்டியிட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சந்திரகவிதா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






















