விவசாயிகளை போட்டிக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் - ரூ. 5 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் பரிசு...!
நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருதுக்கான போட்டியில் கலந்துக்கொண்டு ரூ 5 லட்சம் பெற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் (System of Rice Intensification - SRI) அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் திரளாகப் பங்கேற்றுப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக் குறிப்பின் விவரங்கள் பின்வருமாறு:
விருதின் நோக்கம் மற்றும் பரிசுத் தொகை
நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளைக் கௌரவிக்கவும், குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் முறையைப் பிரபலப்படுத்தவும் தமிழக அரசு இந்த விருதினை வழங்கி வருகிறது.
* முதல் பரிசு: மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
* கூடுதல் சிறப்பு: பரிசுத் தொகையுடன் ரூ. 7,000 மதிப்பிலான தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிகள்
இப்போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் கீழ்க்கண்ட தகுதி வரம்புகளைக் கொண்டிருக்க வேண்டும்
* நில அளவு: விண்ணப்பிக்கும் விவசாயிக்குச் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
* சாகுபடி முறை: அந்த நிலத்தில் கட்டாயம் 'திருந்திய நெல் சாகுபடி' (SRI) முறையைப் பின்பற்றி நெல் பயிரிட்டிருக்க வேண்டும்.
*முன்னோடி விவசாயி: விண்ணப்பதாரர் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாகத் திருந்திய நெல் சாகுபடி முறையை வெற்றிகரமாகச் செய்து வரும் முன்னோடி விவசாயியாக இருத்தல் அவசியம்.
* நெல் ரகங்கள்: தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே சாகுபடி செய்திருக்க வேண்டும்.
அறுவடை மற்றும் தேர்வு முறை
விண்ணப்பிக்கும் விவசாயிகளின் நிலத்தில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படும் போது, சில முக்கிய நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
* நேரடி ஆய்வு: பயிர் முதிர்ச்சியடைந்த பிறகு, வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட வேண்டும்.
* அறுவடை பரப்பு: குறைந்தபட்சம் 50 செண்ட் நிலப்பரப்பில் நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு, அதன் உற்பத்தித் திறன் கணக்கிடப்படும்.
* இறுதி முடிவு: மாநில அளவில் அதிக மகசூல் ஈட்டியவர்களைத் தேர்ந்தெடுப்பதில், வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை
இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
* தொடர்பு கொள்ள வேண்டிய இடம்: தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும்.
* விண்ணப்பம்: அங்கு வழங்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
* பதிவுக் கட்டணம்: விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணமாக ரூ. 150/- மட்டும் செலுத்த வேண்டும்.
மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: "மயிலாடுதுறை மாவட்டம் காவிரி டெல்டா பகுதியின் ஒரு முக்கிய அங்கமாகும். நம் மாவட்ட விவசாயிகள் கடின உழைப்பாளிகள் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை ஏற்பதில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே, இந்த ஆண்டு வழங்கப்படும் மாநில அளவிலான உயரிய விருதினை நம் மாவட்ட விவசாயிகள் தட்டிச் செல்ல வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்த மாவட்டத்தின் விவசாயப் பெருமை மாநில அளவில் பேசப்படும்" என்றார்.
வேளாண் பெருமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மாநில அளவில் சாதனை படைக்கமாவட்ட நிர்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.






















