தஞ்சை அருகே மக்காச்சோளம் அறுவடை தீவிரம்; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
மகசூல் குறைந்தது... விலையும் வீழ்ச்சியடைந்தது: ஒரு புறம் சோகமும் பணம் உடனே கிடைப்பதால் மறுபுறம் மகிழ்ச்சியடையும் விவசாயிகள்
![தஞ்சை அருகே மக்காச்சோளம் அறுவடை தீவிரம்; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை Maize harvesting intensity in Nanchikottai area near Thanjavur Farmers are worried due to fall in prices TNN தஞ்சை அருகே மக்காச்சோளம் அறுவடை தீவிரம்; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/1a8607ce39b3fe469d063c5aed7237b71696234426708113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இருப்பினும் வியாபாரிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்வதால் உற்சாகத்தில் உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுபட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிபட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடியாக மக்காச்சோளத்தை சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது மக்காச்சோளம் அறுவடையை மேற்கண்ட பகுதியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்ததாகவும், ஆனால் தற்போது 15 குவிண்டாலில் இருந்து 20 குவிண்டால் வரை மட்டுமே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில் கடந்த ஆண்டு போலவே 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மக்காச்சோளத்தை வாங்கிய வியாபாரிகள் குவிண்டால் ரூ. 2500 வரை வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது அதனுடைய விலை குறைந்து ரூ.2300- க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். மேலும் அறுவடை செய்து வரும் சோளம் ஈரமாக இருப்பதால் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கேட்பதால் அறுவடை செய்த சோளத்தை நெடுஞ்சாலையில் பரவலாக கொட்டிவைத்து காய வைக்கும் நிலை உள்ளது.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் அறுவடை செய்த சோளத்தையும் காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சோளத்தின் மகசூலும் குறைந்து விலையும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் உடனுக்குடன் வியாபாரிகள் கொள்முதல் செய்து கொண்டு பணத்தை தருவதால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சைத் தரணி என்றாலே நெல்தான் பிரதான பயிர். உலகிலேயே முதலில் பதம் பார்த்து பயிரிடப்பட்டது தஞ்சை தரணி என்கிறது ஆய்வு. வரப்பிற்கு மேல் ஏறி நின்று கையை உயர்த்தினால் கை நுனிக்கும் மேலே வளரும் கம்பீரமான மாப்பிள்ளை சம்பா, கருடஞ்சம்பா போன்றவை சாகுபடி செய்த பெருமை தஞ்சை தரணிக்கு உரித்தானது. தஞ்சை ஒரு போகம் விளைந்தால் தமிழகத்திற்கே உணவளிக்கலாம். தமிழ்நாடு ஒருபோகம் விளைந்தால் இந்தியாவிற்கே உணவளிக்கலாம் என்பார்கள். இப்படி தஞ்சையின் முக்கிய பயிராக நெல் இருந்து வருகிறது.
நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். அதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தற்போது கசப்பே நிரந்தரமாகிவிட்டது. ஓராண்டு பயிரான கரும்பை சாகுபடி செய்து அதன் வருவாய் கிடைப்பதற்குள் பெரும் பாடு பட வேண்டியுள்ளது. அதனால் குறைந்த காலம் நிறைந்த வருமானம் கொடுக்கும் மக்காச்சோளத்தை மாற்றுப்பயிராக சாகுபடி செய்ய தொடங்கி விட்டனர்.
இதன் சாகுபடி காலம் 4 மாதம்தான். அறுவடை செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உடனே பணமும் கைக்கு வந்து விடுகிறது. அதனால் கரும்பு சாகுபடி அளவை குறைத்து அதிக ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுகின்றனர். ஆண்டுக்கு இருமுறை மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)