மேலும் அறிய
விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் கொடுத்தால் உடனே நடவடிக்கை - மதுரை ஆட்சியர் உறுதி
விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்துடன் வந்து புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி.

மதுரை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Source : whats app
மதுரை மாவட்ட முழுவதும் நெற்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்கவில்லை எனில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் மிரட்டலுக்கு ஆளாகும் நிலையுள்ளது, என விவசாய குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய விவசாயிகள்.
விவசாய குறைதீர் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாய குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கத்தினர், வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளாட்சித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தங்கள் பகுதியில் உள்ள விவசாய பிரச்னை தொடர்பான குறைகளை எடுத்துரைத்தனர்.
அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
அப்போது மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து ஒப்பந்ததாரர்கள் தரப்பினர் அதிகாரிகள் துணையோடு மூட்டை ஒன்றுக்கு 70 ரூபாய் முதல் பணம் கொடுத்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என கூறி லஞ்சம் பெறுவதாக தெரிவித்தனர். இதே போன்று பெண் விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசியபோது லஞ்சம் பணம் தரவில்லை என்றால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துவதாகவும் மீறி புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள ஒப்பந்ததாரர்கள் தரப்பினர் மற்றும் தொழிலாளர்கள் மூட்டை ஒன்றுக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கவில்லை எனில் வீடு தேடி வந்து மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நெல்கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ஒவ்வொரு மூட்டைக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் இதனை கட்டுப்படுத்த எதாவது நடவடிக்கை எடுங்கள் என வாக்குவாதம் செய்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம் ஏற்பட்டது
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் லஞ்சம் கொடுக்கக் கூடாது என ஏற்கனவே அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று எதற்காக நீங்கள் லஞ்சம் பணம் கொடுக்கின்றீர்கள், என கேள்வி எழுப்பியதோடு நெல் கொள்முதல் நிலையங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருந்தால் ஆதாரதரதோடு வந்து புகார் அளியுங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். அப்போது பதிலளித்த விவசாயிகள் லஞ்சம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தால் CSR கூட போடுவது கிடையாது என கூறினர். அப்போது விவசாயிகளிடையே நெல்கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில் மற்றொரு தரப்பினர் நீங்கள் ஏன் லஞ்சம் கொடுத்துவிட்டு இங்கு வந்து அதையே பேசி நேரத்தை வீண்டிக்கிறீர்கள் என கூறியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் காவல்துறையினர் வருகை தந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்கவும்





















