தென்னை மரத்தில் கருந்தலை புழு பாதிப்பு - பூச்சி மருந்து அடித்து காப்பாற்றி தர விவசாயிகள் கோரிக்கை
தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்து அடித்து காப்பாற்றி தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையம் அருகே தென்னை மரத்தில் கருந்தலை புழு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள தென்னை மரத்தின் மட்டை காய்ந்து விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கழிவு வெளியேறும் பகுதியில் கந்தசாமிபாளையம், சொட்டையூர், சொக்கன்காடு, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வருவதற்கு முன்பாக நஞ்சை, புஞ்சை விவசாயம் நடைபெற்று வந்தது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் சுத்திகரிப்பு செய்து வெளியேறும் கழிவு நீரினால் இந்த விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு கிடைத்த கடைசி விவசாயமாக தென்னை விவசாயம் இருந்து வருகிறது. அதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வளர்க்க தொடங்கினர். வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு தென்னை விவசாயம் சற்று ஆறுதலாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக இந்த தென்னைக்கும் பெரும் ஆபத்து வந்து விட்டதால், விவசாயிகள் செய்வது அறியாமல் இருந்து வருகின்றனர்.
தென்னை மரத்தில் கருந்தலை புழு பாதிப்பு ஏற்பட்டு அது தென்னை மரத்தின் மட்டையில் உள்ள பச்சையத்தை உண்டு மட்டையை இரு பக்கமும் மூடிக் கொண்டு இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு புழு ஒரு முறை முட்டையிட்டால் சுமார் 150 புழுக்கள் உருவாகிறது. இதனால் அசுர வேகத்தில் கடந்த சில நாட்களில் 30 ஏக்கரில் இந்த பாதிப்பு இருந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் பூச்சிகளை பிடிக்க 2 லட்சம் மதிப்பில் விளக்கு பொறியை வெளியூரில் இருந்து பெற்று தருவதற்குள் அவை சுமார் 60 ஏக்கருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் காகித ஆலை நிர்வாகம் ஒரு ஏக்கருக்கு 2 விளக்கு பொறி என 60 ஏக்கருக்கு 120 விளக்குப் பொறிகளை வாங்கி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். ஆனால், அவை பெரிய அளவில் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில் கருந்தலை புழு தாக்குதல் வேகமாக பரவி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பாதிப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றதுடன், எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆழியார் மற்றும் பட்டுக் கோட்டையில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று ஆலோசனை பெற்ற வேண்டிய நிலை இருப்பதால் கரூரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூலிமங்களம் கிராமத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்பட்ட போது பூச்சி மருந்து அடித்து தென்னையை காப்பாற்றி தந்தது போல, தற்போதும் தென்னை பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்துகளை அடித்து தென்னையை காப்பாற்றி தர வேண்டும். இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் குளிர்ந்த காலநிலை காரணமாகவும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் மாலை நேரங்களில் வெளியேறும் புகை மண்டலம் காரணமாக இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், ஆலை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தென்னை விவசாயிகளை காப்பாற்ற போர்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.