தூத்துக்குடி : வயக்காட்டுக்கு நடுவே சாலை அமைத்து கொண்ட ராஜபதி விவசாயிகள் வைக்கும் கோரிக்கை
எங்களால முடிஞ்சதை நாங்க செஞ்சுட்டோம். இனிமேல், அரசுதான் தார்ச்சாலை அமைச்சுத் தரணும்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்டது ராஜபதி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு ராஜபதி, சேதுசுப்பிரமணியபுரம், காரவிளை, திருவிளையாவட்டம், மேல ஒத்தவீடு, கருத்தன் குடியிருப்பு, மணத்தி ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. 1,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.ராஜபதி ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதி முழுவதுமே விவசாயத்தை நம்பி உள்ளனர். இப்பகுதியில் சுமார் 3500 ஏக்கர் பரப்பில் நெல், வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விளை நிலங்கள், இடைவெளியின்றி அடுத்தடுத்தாற்போல அமைந்துள்ளதால் சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு முடிவு எட்டப்படவில்லை.விவசாய நிலத்திற்கு நடுவில் சாலை இல்லாததால் உழவு முதல் அறுவடை வரை சிரமப்பட்டு நெல், வாழை சாகுபடியை செய்து வந்தனர். விவசாயிகள் ஒன்றிணைந்து அவரவரின் நிலத்தில் இருபுறமும் 10 முதல் 20 அடிவரை சாலைக்காக இடம் அளித்த நிலையில், 2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து 50 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ராஜபதியைச் சேர்ந்த விவசாயிகள்.இந்த நிலையில், ராஜபதி ஊராட்சி மன்றத் தலைவர் செளந்தரராஜன், ஊரிலுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய நிலங்களுக்கு நடுவில் சாலை அமைப்பது தொடர்பாக கூட்டம் நடத்தி வெறும் தீர்மனம் நிறைவேற்றினார். அதோடு மட்டும் நின்று விடாமல் விவசாயிகளின் ஒத்துழைப்பினால், 32 நாட்களில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், தாமிரபரணியின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் தென்கால் பாசனத்தின் கீழ் இந்த பகுதிக்கு விவசாய நிலத்துக்கு தண்ணீர் கிடைச்சுட்டு இருக்கு. நெல், வாழைதான் எங்களோட முக்கியமான சாகுபடிப் பயிர். இந்த நிலங்ககளுக்கு நடுவுல சாலை இல்லாததுனால, விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வயலுக்கு நடுவுல உள்ள ஒன்றரை அடி வரப்பு வழியாகத்தான் நடந்து போக முடியும்.
இல்லேன்னா, 10 கி.மீ தூரம் சுத்திதான் வயலுக்குள்ள வரணும். டிராக்டர் வந்த பிறகு, அடுத்தடுத்த நிலங்கள்ல உழவு முடியுற வரைக்கும் காத்திருப்போம். அறுவடைக்கும் அப்படித்தான். இதனால, விவசாயம் செய்யுறதுல ரொம்ப சிரமப்பட்டோம்.
எங்க நிலத்து வழியா சாலை அமைச்சுத் தர வலியுறுத்தி அரசு அதிகாரிகள், ஆட்சிடரிடம் பல முறை மனு அளித்தும், இங்குள்ள விவசாயிங்க திரண்டு பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பலனுமில்லை. ஊர்த்தலைவரின் முயற்சியாலயும், விவசாயிங்க ஒத்துழைப்பாலயும் மண் சாலையை போட்டுருக்கோம் எனக் கூறும் இவர், இந்த ரோடு போட்டதால விவசாயிகள் சுலபமா போகவும் விவசாயம் செய்யவும் ஏதுவா இருக்கும் எனக்கூறும் இவர் ஊர் கூடி தேர் இழுத்துட்டோம் என்கின்றனர்.
ராஜபதி ஊராட்சி மன்றத் தலைவரான செளந்தரராஜன் கூறும்போது, நானும் விவசாயிதான். விவசாயியோட பிரச்னை ஒரு விவசாயிக்கு நல்லாவே தெரியும். இதுக்கு தீர்வே இல்லயான்னு யோசிச்சிக்கிட்டிருந்தோம். நாலு மாசத்துக்கு முன்னால ஊர்ல உள்ள விவசாயிங்க பேசிக்கிட்டிருக்கும் போதுதான் ரோடுக்காக எதுக்கு அரசாங்கத்தையே நம்பிக்கிட்டிருக்கணும். ய்
பேசாம வயல்காரங்க அவரவர் நிலத்துல பத்துப் பதினைஞ்சடி நிலத்தை ரோடுக்காக கொடுங்க. அப்படியே முடிஞ்ச வரைகும் மண்ணையும் கொடுத்தீங்கண்ணா ரோட்டை போட்டுடலாம். ஜே.சிபி. டிராக்டர், ரோடு லோலர் ஆகிய வாகனத்திற்கான வாடகை, டீசல், வேலையாள் கூலிக்கு மட்டும் செலவுத் தொகையை கணக்குப்பாத்து விவசாயிங்க, ஊர் மக்ககிட்ட வசூல் செஞ்சுக்கலாம் என ஊர்ல உள்ள விவசாயிகள் ஒரு யோசனை சொன்னாங்க.
அதை எல்லா விவசாயிகளும் வரவேற்றாங்க. உடனே அதை தீர்மானமா நிறைவேத்தினோம். 20 லட்சம் வரை பணம் வசூலாச்சு. எல்லா விவசாயிங்களும் தாராளமா மண் கொடுத்தாங்க. ராத்திரி பகலா எல்லாரும் வேலை பார்த்ததுனால மூணு மாசமா செய்ய வேண்டிய வேலையை ஒரே மாசத்துல செஞ்சு முடிச்சுட்டோம். இதனால அவரவர் வயலுக்கு அவரவர் எளிதா போகலாம். விவசாயப் பணிகளை கவனிக்கலாம். முக்கியமா அறுவடைக்குப் பிரச்னை இல்லை. இந்த ரோடு போட்டதால் விவசாயிகள் மட்டுமில்லாம பள்ளி, கல்லூரிக்குப் போகுற மாணவர்களும் இந்த வழியாத்தான் போறாங்க.
சைக்கிள், பைக், டிராக்டர், வேன் என வாகனங்கள் அணி வகுத்துப் போறதைப் பார்க்குறப்போ சந்தோசமா இருக்கு. எங்களால முடிஞ்சதை நாங்க செஞ்சுட்டோம். அரசு தார்ச்சாலை அமைஞ்சுட்டா மினிபஸ்ஸும் போக்குவரத்தும் கிடைச்சுடும் என்கிறார்.