2.85 லட்சம் டன் பருத்தி கொள்முதல்... யார் சொல்லியிருக்காங்க தெரியுங்களா?
தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 4 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 770 டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் 4 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடைகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தற்போது தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில வணிகர்கள் அதிகளவில் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதால் போட்டி மூலம் அதிக விலை கிடைக்கிறது.
வணிகர்களால் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்குரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 770 டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு 1392 எண்ணிக்கையிலான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தரத்தின் அடிப்படையில் பருத்திக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதால் பருத்தியின் தரம் மற்றும் ஈரப்பதம் 8 சதவீ தம் முதல் 12 சதவீதத்திற்குள் இருக்கும்பட்சத்தில், அவற்றிற்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை பின்வரும் வழிமுறை களை பின்பற்றி உரிய தரத்துடன் மேற்காணும் விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து அதிகபட்சவிலை பெற்று பயனடையலாம்.
வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியினை, விவசாயிகள் அதிகாலை நேரத்தில் செடிகளில் இருந்து பறித்து நிழலில் நன்கு உலர்த்தி அதில் கலந்துள்ள இலை சருகுகள், கொட்டுப் பருத்திகள் போன்ற பொருட்களை நீக்கி விட்டு தரத்தின் அடிப்படையில் தனித்தனியே பிரித்து, சாக்குகளில் நிரப்பி ஏல விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். பருத்தி விளைப்பொருளினை நன்கு உலர்த்தி 8ல் இருந்து 12 சதவீதம் ஈரப்பத்திற்குள் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோபுராஜபுரம் ராஜகிரி பண்டாரவாடை ரெகுநாதபுரம் சரபோஜி ராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை பயராக பருத்தி அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல் உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி பயிர் செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சில விவசாயிகள், நெல்லுக்கு மாற்றாக பருத்தி சாகுபடியில் இறங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்க நல்ல விலை கிடைத்து வருவதால் தற்போது அதிக விவசாயிகள் இந்த சாகுபடியை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விலையும் கட்டுப்படியாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















