திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை சாகுபடி பணிகளில் களை எடுக்கும் பணிகள் மும்முரம்
களைகள் அதிகம் ஏற்பட்டால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் வெகு மும்முரம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை நெல் சாகுபடியில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீரை சிக்கனத்தை கையாளுதல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்துள்ளார் மன்னன் கரிகாலச்சோழன்.
முப்போகம் விளையும் நெற்களஞ்சியம்
சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி என விவசாயிகள் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது.
ஆழ்குழாய் நீர் பாசனத்தில் குறுவை சாகுபடி
காவிரி டெல்டா பகுதிகளில் ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படுவதை முன்னிட்டு குறுவை சாகுபடி பபணிகளை விவசாயிகள் தொடங்குவர். ஆழ்குழாய் நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் சற்று முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம்.
தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேட்டூர் அணை திறப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடியை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்,
பரவலாக பெய்துவரும் தொடர் மழை
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, அம்மையகரம் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி வயல்களில் களை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். காலை வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்கிறது.
குறுவை சாகுபடி பணிகளில் களை எடுத்தல்
இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். களைகள் அதிகம் ஏற்பட்டால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் வெகு மும்முரம் காட்டி வருகின்றனர்.