விவசாயிகளே உங்களின் கவனத்திற்கு: மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு என்ன?
தமிழ்நாடு அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்க திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
தஞ்சாவூர்: மானிய விலையில் மின்மோட்டார் பம்ப்செட்டுகள் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார்.
மானியத்தில் மின் மோட்டார்கள்
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்தில் மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பழைய திறன் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்கவும் புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்கவும் மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
எந்த விவசாயிகள் பயன்பெற முடியும்
நுண்ணுயிர் பாசன திட்டத்தின்கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க இயலும். மேலும் பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.15,000/- மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக் காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்லும்போது பாம்பு கடி. விஷப்பூச்சிக் கடி உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் தங்களது கிணறுகளுக்கு செல்லாமலே தங்களது இருப்பிடத்திலிருந்தே மின்சார பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் எங்கிருந்தாலும் தங்களின் கைப்பேசி மூலம் பம்புசெட்டுகளை இயக்கவும் கண்காணிக்கவும் முடியும்.
கைப்பேசி மூலம் இயக்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தல்
இந்த கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000 வரை மானியமாக தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டங்களில் பயன்பெற தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியிலும் அணுகலாம்.
உங்கள் பகுதிக்கு எங்கே அணுக வேண்டும்
இதேபோல் கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம் திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.