தஞ்சை அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகள் மும்முரம்
இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகை தினத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருக்கும். 1 ஏக்கர் பரப்பளவுக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவைப்படும்.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே சூரக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக தொடங்கி உள்ளனர். இதற்காக வயலை உழுது விதை கரும்புகளை வயலில் நட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய இடத்தை பொங்கல் கரும்பு பிடிக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை, சூரக்கோட்டை என மாவட்டம் பல பகுதிகளில் பொங்கல் கரும்புகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இந்த கரும்புகள் 10 மாதம் பயிராகும்.
பொங்கல் கரும்புகள் நடவுப்பணி
பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால்தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். தற்போது பொங்கல் கரும்பு நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை அருகே சூரக்கோட்டையில் விதைக்கரும்புகள் தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவை
இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகை தினத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருக்கும். 1 ஏக்கர் பரப்பளவுக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவைப்படும். ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும். டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.
நிலத்தை சமன் செய்து பார்கள் அமைக்க வேண்டும்
மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து, பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும். கரும்பு பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்த பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும். அதற்கு பின்னர் விதை கரும்புகளை நடவு செய்ய வேண்டும். தற்போது தஞ்சை அருகே சூரக்கோட்டை பகுதியில் விதைக்கரும்புகள் நடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் கரும்பு சாகுபடி மும்முரம்
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த கரும்பு 10 மாத பயிராகும். இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு வழங்கப்பட்டது. அதனால் இந்தாண்டு பொங்கல் கரும்பு சாகுபடி கூடுதலாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.