பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7309க்கு ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309 ஏலம் போனது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309 ஏலம் போனது.
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுப்பயிர்கள் சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிதான் பிரதானம். இருப்பினும் விவசாயிகள் பல்வேறு மாற்றுப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். எள், நிலக்கடலை, உளுந்து, செவ்வந்தி பூ, சம்பங்கி பூ, சேனைக்கிழங்கு என பல்வேறு சாகுபடிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பருத்தி சாகுபடி முக்கிய அங்கம் வகிக்கிறது.
வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி
நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. பொதுவாக, பருத்தி பரந்த அளவிலான மண்ணில் நன்றாக செழித்து வளரும். குறிப்பாக, நடுத்தர முதல் கனமான மண் வரை நன்கு வளரும். பருத்தி சாகுபடிக்கு கருப்பு பருத்தி மண் மிகவும் ஏற்ற மண்வகையாகும். மேலும், இது 5.5 முதல் 8.5 வரையிலான கார அமில அளவை பொறுத்துக்கொள்ளும் தன்மையுடையது.
மண்ணின் வகையைப் பொறுத்து, வயலை 15 முதல் 20 செ.மீ ஆழம் வரை வளைப்பலகைக் கலப்பையின் மூலம் நன்கு உழுது, பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். வயலில் குச்சிகளை விடக்கூடாது. விதைப்புக்கு முன் நீர்ப்பாசனம் செய்வது, பயிர் சிறப்பாக அமைய மிகவும் அவசியம். இப்படி விவசாயிகளுக்கு மகசூலையும் வருமானத்தையும் அள்ளித்தரும் பருத்தி சாகுபடி தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் விவசாயிகள் மேற்கொண்டனர்.
பருத்தி அறுவடைப்பணிகள்
தற்போது இந்த பருத்தி செடிகளை அறுவடை செய்யும் பணி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. பருத்திக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் இதை ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விற்பனை செய்யும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
மறைமுக ஏலத்தில் நல்ல விலைக்கு போன பருத்தி
இம்மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1230 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர். இதில் கும்பகோணம், செம்பினார் கோவில், பண்ரூட்டி, விழுப்புரம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, தேனி, பண்ருட்டி பகுதிகளைச் சார்ந்த 11 வணிகர்கள் கலந்து கொண்டனர்.
இம்மறைமுக ஏலத்தில் 180 மெ.டன் அளவு பருத்தி வரத்து வரப்பெற்றது. அதிகப்பட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309 என்ற வீதத்திலும் குறைந்தபட்சமாக குவாண்டால் ஒன்றிற்கு ரூ. 6019 மற்றும் சராசரியாக ரூ. 6820 என்ற வீதத்திலும் விற்பனை செய்யப்பட்டது... பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 1.20 கோடி ஆகும். இம்மறைமுக ஏலமானது விற்பனைக்கூட கண்காணிப்பாளர் இரா.தாட்சாயினி மற்றும் வேளாண்மை அலுவலர் தாரா தலைமையில் மேற்பார்வையாளர் சிவானந்த் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாப்பிளை சம்பா பாரம்பரிய நெல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.3500 என்ற அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது.