செயற்கையான உரத்தட்டுப்பாட்டை போக்கணும்: இந்த குற்றச்சாட்டை கூறுவது யார்?
ஆலக்குடி கிராமத்தில் நீண்ட நாட்களாக விவசாயிகள் போராடி வரும் அடிப்படை கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் தாமதமாகிக் கொண்டே வருகிறது. இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் செயற்கையாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசுகையில், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதே நிலை அடுத்த கூட்டத்திலும் நிலவினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பெரமூர் ஆர்.அறிவழகன்: மாவட்டம் முழுவதும் செயற்கையாக உரத்தட்டுப்பாடு நிலவுவதை தடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் மழையால் பூச்சி தாக்குதல் மற்றும் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் போகக்கூடாது என்பதால் விவசாயிகளுக்கு உரங்கள் முக்கிய தேவையாக உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களுக்கு செயற்கையாக தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் மின்னணு பண பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் துறை வாயிலாக பாய் நாற்றங்கால் உபகரணங்கள் வழங்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்ததால் வயல்களில் களைகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலை திட்டத்தால் களைப்பறிக்க ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. களை பறிக்கவாவது 100 நாட்கள் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை முடிந்த பின்னர் வைக்கோல் கட்ட பிளாஸ்டிக் நூலை பயன்படுத்துகின்றனர். இதை தடுத்து மக்கும் தன்மை கொண்ட சணலை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
கோவிந்தராஜன்: குருங்குளம் சர்க்கரை ஆலையில் டிசம்பர் கடைசி வாரத்தில் அரவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை டிசம்பர் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும். விழுப்புரம் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து இங்கு கரும்புகள் வெட்டப்படுகிறது. இதில் காலதாமம் ஏற்பட்டால் அவர்கள் பிற பகுதிகளுக்கு வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.
எனவே டிசம்பர் முதல் வாரத்திலேயே சர்க்கரை ஆலையில் அரவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் விவசாயிகள் கடலை சாகுபடி செய்ய தொடங்கி விடுவர். அவர்களுக்கு தட்டுப்பாடு இன்றி விதை கடலை மற்றும் உளுந்து போன்றவை கிடைக்க கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நகை கடன் செலுத்துவதில் முன்பு இருந்த முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4ஆயிரம் வழங்க வேண்டும். வெட்டுக்கூலியையும் அரசை இயக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை கரும்பை இலவசமாக வழங்க வேண்டும்
ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: சம்பா பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்து தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த உழவர் பாதுகாப்பு திட்ட மூலம் சிறு,குறு விவசாயிகள் பயனடைந்து வந்தனர். தற்போது முடங்கியுள்ள இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற சர்வே பணியில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளை அரசு ஈடுபடுத்தி வருகிறது. இவர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை செய்ய தர வேண்டும். சம்பா, தாளடி நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பயிர் கடன் வழங்காமல் கூட்டுறவு சங்கங்கள் புதிய விவசாயிகளை புறக்கணித்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் கூட்டு பட்டாவை பிரித்து தனிப்பட்டா வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ.தங்கவேல்: ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து திருவோணம் என்று உருவாக்கி 9 மாத காலம் ஆகிறது. ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு சில அலுவலர்களை திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்து விட்டதால் இங்கு அலுவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது. காலி பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்.
கோனேரிராஜபுரம் கே.வி.எஸ்.வீரராஜேந்திரன்: திருவையாறு வட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறிகள் பிரதான பயிர்களாக உள்ளன. வாழை, காய்கறிகள், வெற்றிலை போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் சாகுபடி செலவும் அதிகம் செய்யப்படும் பயிர்களாக இவை இருப்பதால் வளப்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய தொழிலாளர்களின் தேவை இந்த தோட்டக்கலை பயிர்களுக்கு அவசியமாக உள்ளது. இதற்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நெல் சாகுபடி பணிகள் இல்லாத நேரங்களில் விவசாய தொழிலாளர்கள் இப்பகுதிக்கு எளிதில் வந்து விவசாய வேலைகள் மேற்கொள்ள ஏதுவாக குடமுருட்டி ஆற்றில் ஏற்கனவே உள்ள பாலம் போல் (கோனேரிராஜபுரம்- வளப்பக்குடி) அதனை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே (வளப்பக்குடி – மகாராஜபுரம்) பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
என்.வி.கண்ணன் : பூதலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தொடர்ந்து நிரந்தரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இராயமுண்டான்பட்டி டிபிசி க்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதை துரிதப்படுத்த வேண்டும். நவலூர் கிறிஸ்துவ தெருவிற்கு மழை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்ற ஏற்கனவே ஊரக வளர்ச்சி துறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் பாலம் அமைத்து தர வேண்டும். வேலுப்பட்டியில் மிகவும் கீழே அபாயகரமான முறையில் தொங்கும் மின் கம்பிகள் மேலே இழுத்து சீரமைக்க உடன் நடவடிக்கை எடுத்து உயிர் சேதத்தை தடுக்க வேண்டும்.
ஆலக்குடி கிராமத்தில் நீண்ட நாட்களாக விவசாயிகள் போராடி வரும் அடிப்படை கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் தாமதமாகிக் கொண்டே வருகிறது. இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.