Agriculture: கோரிக்கை வைத்த விவசாயிகள்- பயிர்களுக்கு காப்பீட்டு தொகையை விடுவித்த அரசுகள்
கடுமையான நெருக்கடியான வேளையில் பயிர் காப்பீடு விடுவித்திருப்பதற்கு விவசாயிகள் மத்திய, மாநில அரசகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய்,சூரியகாந்தி, பருத்தி போன்ற விதைகள் விதைத்தனர். புரட்டாசி மாதம் முழுவதும் மழையின்றி ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் பெய்த மழைக்கு விதைகள் முளைத்தன. விடாத பெய்த மழையால் நிலத்தில் பயிர்களுடன் முளைத்த களையை ,மருந்து தெளிக்க, உரமிட பல மடங்கு செலவு ஏற்பட்டன. மனம் தளராத விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டனர். உளுந்து, பாசி செடிகள் நன்கு காய்பிடித்து வந்தன. வெள்ளைச் சோளம், கம்பு, கதிர் பிடித்து வந்த நிலையில் தொடர் மழையால் நிலத்தில் வேர் பிடிமானமின்றி சாய்ந்தன. கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் செடி நல்ல வளர்ச்சியுடன் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. அன்றையதினம் பெய்த வரலாறு காணாத பெருமழைக்கு உளுந்து, பாசி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய், போன்ற பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. உளுந்து, பாசி செடிகளிலேயே நெத்துக்கள் முளைத்தன. கொத்த மல்லி மார்கழி மாத பனியில் வளரக்கூடியது. அதற்கு மழை தேவை இல்லை. ஆனால் பெருமழை பெய்து செடிகள் அழுகி விட்டன.வெங்காயம் திரட்சி ஏற்பட்டு வந்த நிலையில் அதிக மழையால் சேதமடைந்துவிட்டன.
மேற்கண்ட பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். பெரும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், உடமைகள், கால்நடைகள், பயிர்கள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த மத்திய நிதியமைச்சர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், பயிர்காப்பீடு உடனடியாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பரிசீலிப்பதாக உறுதியளித்த மத்திய நிதியமைச்சர் நடப்பாண்டில் பயிர்காப்பீடு செய்த கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், வாழை, நெல் ஆகியவற்றுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு மத்திய அரசு விடுவித்துள்ளது. இதனால் எட்டயபுரம், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டப்பொது, "தூத்துக்குடி மாவட்டத்தில் கொத்தமல்லிக்கு ரூபாய் 90 லட்சத்து 18 ஆயிரம், வெங்காயத்திற்கு ஐந்து கோடி 22 லட்சம், மிளகாய்க்கு 8 கோடியே 32 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்கில் கடந்த இரண்டு நாட்களாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதர மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி, கம்பு, சூரியகாந்தி, பருத்தி போன்றவைகள் கடந்த மழைக்கு பாதிக்கப்பட்டுள்ளன. அப்பயிர்களுக்கும் உடனடியாக நடப்பாண்டிலேயே பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும். தவிர மாநில பேரிடர் மற்றும் மேலாண்மை துறையால் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்ளுக்கு ஹெட்டோர் ஒன்றுக்கு ரூபாய் எட்டாயிரத்து ஐநூறு கணக்கெடுக்கபட்டு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் கூறினார். அதையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.கடுமையான நெருக்கடியான வேளையில் பயிர் காப்பீடு விடுவித்திருப்பதற்கு விவசாயிகள் மத்திய மாநில அரசகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.