Tiger Sivakumar | ரவுடிக்கெல்லாம் ரவுடி வெற்றிமாறனின் REAL அரசன்! யார் இந்த மயிலை சிவகுமார்? Arasan
வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தின் டீசரில் ரத்தம் தெறிக்க, தெறிக்க அரிவாளுடன் வரும் சிம்புவின் கதாப்பாத்திரம் யாரை அடிப்படையாகக் கொண்டது? மயிலாப்பூர் சிவக்குமார் என்ற பெயர் ஏன் அடிபடுகிறது? சென்னையை ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த நிஜமான டான் டைகர் சிவாவின் கதை என்ன? அவர் யார் என்பதை பார்க்கலாம்....
மயிலாப்பூர் சிவக்குமார் இவரை டைகர் சிவா என்றும் மயிலை சிவா எனவும் அழைக்கப்பட்ட அந்த நிழல் உலக தாதா. சென்னை குற்றப் பிரிவின் ஆவணங்களில், ஏ-பிளஸ் கேட்டகரி ரவுடியாகக் குறிக்கப்பட்டவர். அவரது ராஜ்ஜியம் மயிலாப்பூர் முதல் பல முக்கிய துறைமுக பகுதிகள் வரை நீண்டிருந்தது. கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கொலை, கொள்ளை என தன் பலத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியவர். 40-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாதாரண ரவுடியாக அல்லாமல், ஒரு ரவுடி கூட்டத்தின் தலைவராக மயிலாப்பூர் சிவக்குமார் இருந்தார். இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பல கொலை வழக்குகள், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் அடக்கம். நீதிமன்றம், போலீஸ் என அனைத்தையும் மீறி, இவருக்கென ஒரு தனியான சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டவர். சிவகுமார் கொலைகளை வரைபடமாக்கி திட்டமிடுவதில் பெயர் வள்ளவராம். இவர் பல சம்பவங்களை கையாண்ட விதமும், இவரின் அஞ்சா நெஞ்சமும் தான் இவருக்கு டைகர் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. பண பலமும், சில அதிகாரப் பிடிப்புகளும் இவருக்கு இருந்ததால், போலீஸ் இவரைப் பிடிப்பது பெரும் சவாலாகவே இருந்தது. இவரின் சாம்ராஜ்யம் ஒரு அசைக்க முடியாத கோட்டையாக நீடித்தது.
இவரது பரம எதிரி சென்னை பார்டர் தோட்டம் சேகர். அவரை போட்டுத்தள்ளிய பிறகு இவருக்கு எதிரி இவர்தான் என்ற நிலையில் சிவகுமார் இருந்தார். சேகரின் மனைவி மற்றும் மகன் அழகுராஜா ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வரும்போது, அண்ணாசாலை அருகே நாட்டு வெடிகுண்டை வீசி கொல்ல முயற்சி நடந்தது. அதற்கு சிவகுமார்தான் பின்னணி என்று சொல்லப்பட்டது. தன்னை கொலை செய்ய சிவகுமார் தருணம் பார்த்து காத்திருப்பதை உணர்ந்த அழகுராஜா, சிவகுமாரை போட்டுத்தள்ளுவதற்கான நாளை எதிர்நோக்கி காத்திருந்தார். இப்படி இவர்களுக்குள் யார், யாரை போட்டு தள்ளுவது என்ற போட்டி இருந்து கொண்டே இருந்தது. தனக்கு நிகரான எதிரியே இல்லை என்று மார்தட்டி நின்ற சிவகுமாருக்கு, அழகுராஜா எதிரியாக உருவெடுத்து நின்றார்.
இந்த நிலையில் சிவகுமார், சூர்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரது திருமணத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கலந்து கொண்டு, 6 பவுன் தங்கசங்கிலியை திருமண பரிசாக கொடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. சிவகுமாருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் மயிலாப்பூரில் பெண் ஒருவரை தீ வைத்து கொல்லமுயன்ற வழக்கில், சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அவரது சகோதரி வீட்டில் தங்கி இருந்தபோது, சிவகுமாரை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்தனர். சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்
பின் சென்னை மேற்கு மாம்பலத்தில் கடன் ஒன்றை வசூலிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவரை பின் தொடர்ந்து அழகுராஜா தலைமையில் 7 பேர் கொண்ட கும்பல் சிவகுமாரை தலை, கழுத்து ஆகிய இடங்களில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். சரமாரியாக வெட்டு விழுந்ததால், சிவகுமாரின் முகம் சிதைந்து அவர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். சிவகுமாரை தீர்த்துக்கட்டிய கொலை வெறிக்கும்பல் அங்கேயே வெற்றி கும்மாளம் போட்டார்களாம். அவர்களை பிடிக்க முயற்சித்த சிவகுமாரின் நண்பர் அறிவழகன் உள்ளிட்ட இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டனர். அவர்களும் காயம் அடைந்தனர்.
இந்த கொலைக்கு முக்கிய காரணம்... சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் அதாவது 2001 ஆம் ஆண்டு நடந்த தோட்டம் சேகர் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கை தான் கூறப்படுகிறது. தன்னை காப்பாற்றி கொள்ளவும் அழகுராஜா திட்டம், தீட்டி இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கொலையின் சங்கிலித் தொடரில் டைகர் சிவாவின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.
இப்படி ஒரு கொடூரமான, உண்மைச் சம்பவத்தைத்தான் வெற்றிமாறன் அரசன் படத்தின் மூலம் திரைக்குக் கொண்டு வரப்போகிறார் என பேச்சு அடிப்படுகிறது. மயிலாப்பூர் டைகர் சிவாவின் வாழ்க்கை, அவரது ஆதிக்கம், அவரது வீழ்ச்சி இவையே படத்தின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
நிஜ ரவுடிகளின் வாழ்க்கையை படமாக்குவதில் வெற்றிமாறன் வல்லவர் என்று அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், 'டைகர் சிவாவின்' கதையை அவர் எப்படிப் படைத்திருக்கிறார் என்பதைத் திரையில் காண வெற்றிமாறன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.




















